/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் தினசரி கடைகளில் வரி வசூல்: நிர்ணய தொகையை விட 3 மடங்கு அதிகம்
/
சிவகங்கையில் தினசரி கடைகளில் வரி வசூல்: நிர்ணய தொகையை விட 3 மடங்கு அதிகம்
சிவகங்கையில் தினசரி கடைகளில் வரி வசூல்: நிர்ணய தொகையை விட 3 மடங்கு அதிகம்
சிவகங்கையில் தினசரி கடைகளில் வரி வசூல்: நிர்ணய தொகையை விட 3 மடங்கு அதிகம்
ADDED : ஜூன் 01, 2024 04:34 AM

சிவகங்கை: சிவகங்கை நகராட்சி எல்கைக்குள் ரோட்டோர தினசரி கடைகளுக்கான வரியை கூடுதலாக வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால் வியாபாரிகள் சிவகங்கைக்கு பொருட்களை கொண்டு வர தயங்குகின்றனர்.
இந்நகராட்சிக்கு உட்பட்ட தேசிய, மாநில ரோடு, தெருக்களில் தினசரி கடை அமைத்து விவசாயிகள் காய்கறி, துணிகள், திண்பண்டங்களை விற்பனை செய்கின்றனர்.நகராட்சி நிர்வாகம் நிர்ணயித்த கடைகளுக்கான தினசரி கட்டணத்தை விட 3 மடங்கு அதிகமாக வசூலில் ஈடுபடுகின்றனர்.
சொற்ப லாபம் ஈட்டும் வியாபாரிகள்,விவசாயிகள் தாக்கு பிடிக்க முடியாமல் சிவகங்கையில் வியாபாரம் செய்ய வரவே அஞ்சுகின்றனர். அப்படியும் சில வியாபாரிகள் கூடுதல் பணம் செலுத்தி அவற்றை பொருட்களின் விலை மீது வைப்பதால், மக்களும் விலைவாசி உயர்வால், கடைகளுக்கு வரவே அஞ்சுகின்றனர்.
கடைகளுக்கு நிர்ணயித்த தொகையை வசூலிக்கிறார்களா என கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதால் கடைகளுக்கு ரூ.100 வரை அதிகரித்துள்ளனர். சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் கூடுதல் வரி வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
ரூ.14.54 லட்சம் டெண்டரில் பாதிப்பு
நகராட்சி தினசரி கடை வரிவசூல் ஒப்பந்ததாரர் எம்.மதிவாணன் கூறியதாவது: ஏற்கனவே ரூ.6 லட்சத்திற்கு டெண்டர் எடுத்தவர்கள் கடைக்கு ரூ.50 முதல் 60 வரை வசூலித்துள்ளனர். தற்போது ரூ.14.54 லட்சத்திற்கு டெண்டர் எடுத்துள்ளேன். பல்வேறு விதங்களில் செலவு அதிகரித்துவிட்டன.
கடைக்கு ரூ.50 முதல் 60 வரை தான் வசூலிக்கிறோம். ஒரு சில லாரிகளிடம் தான் ரூ.100 வசூலிப்போம்.
சிவகங்கை நகராட்சி கமிஷனர் கிருஷ்ணாராம் கூறியதாவது: நகராட்சியில் ரோட்டோர கடை வரி வசூலிக்க (2024 -2027 வரை) டெண்டர் விட்டதில், விதிப்படி நகராட்சி நிர்ணயித்த வரியை தான் வசூலிக்க வேண்டும். கூடுதல் வரி வசூலிப்பதாக ஒப்பந்தாரர் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால், சட்டவிதிக்கு உட்பட்டு அவரது ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.
சிவகங்கை நகராட்சி எல்கைக்குட்பட்ட பகுதியில் தினசரி கடை வரி வசூலிக்க தள்ளுவண்டிக்கு ரூ.25, 10 சதுர அடி கடைக்கு ரூ.20, 15 சதுர அடிக்கு ரூ.25, 20 சதுர அடிக்கு ரூ.30 மட்டுமே வசூலிக்க வேண்டும். 20 சதுர அடிக்கு மேல் ரோட்டோர கடைகள் வைக்க அனுமதியில்லை என நகராட்சி ஒப்பந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளனர். நகராட்சி ஒப்பந்த அறிவிப்பில் தெரிவித்ததை விட மூன்று மடங்கு அதிகமாக கடைக்கு ரூ.100 வரை வசூலிப்பது தான் மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.