ADDED : மார் 28, 2024 05:39 AM
சிவகங்கை: லோக்சபா தேர்தலையொட்டி நடத்தப்பட்ட வாகன சோதனையில் சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை ரூ.24லட்சத்து 47ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வாகனங்கள் மூலமாக எடுத்துச்செல்லப்பட்டு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 10 செக் போஸ்ட்களில் வாகன பரிசோதனை நடந்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்துார், மானாமதுரை(தனி) ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. பல்வேறு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சிவகங்கை சிவன்கோவில் அருகே ஏ.டி.எம்., மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.13லட்சம், சிவகங்கை அருகே சிலந்தகுடி, சக்கந்தி விலக்கு மற்றும் மானாமதுரை, திருப்புவனம் பகுதி உள்பட மாவட்டம் முழுவதும் இதுவரை ரூ.24 லட்சத்து 47ஆயிரத்து 900 பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சொந்த தேவைகளுக்காக பணம் கொண்டு செல்பவர்கள் ரூ.50ஆயிரத்திற்கு அதிகமாக கொண்டு சென்றால் ஆவணங்கள் வேண்டும் அல்லது அதற்கு கீழ் உள்ள தொகையை மட்டுமே எடுத்துச்செல்ல வேண்டும் என்பதில் கவனமாக இருந்தால் பாதிப்பு இருக்காது தேர்தல் நெருங்கும் வேளையில் வாகன சோதனை இன்னும் தீவிரப்படுத்தப்படும். ஆகையால் பொதுமக்கள் வணிகர்கள் கொண்டு செல்லும் பணத்திற்கு உரிய ஆவணங்களை எடுத்து செல்ல வேண்டும்.