/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
2500 ஏக்கரில் தக்கை பூண்டு சாகுபடி
/
2500 ஏக்கரில் தக்கை பூண்டு சாகுபடி
ADDED : ஆக 29, 2024 11:35 PM

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட அளவில் நெல் நடவுக்குமுன் நிலத்தில் மடக்கி போட்டு உழவு செய்து, இயற்கை உர தன்மையை அதிகரிக்க செய்ய,2,500 ஏக்கரில் தக்கை பூண்டு சாகுபடி செய்துள்ளனர்.
மாவட்டத்தில் சராசரியாக 75,000 எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்குஉள்ள விவசாயிகள் என்.எல்.ஆர்., பிபிடி., ஜேசிஎல் ரக நெல்லை அதிகம் பயிரிடுகின்றனர்.
கடந்த ஆண்டு முதல் தேவகோட்டை, கண்ணங்குடி, இளையான்குடி ஒன்றியத்தில் ஆர்.என்.ஆர்., ரக நெல்லுக்கு நல்ல விலை கிடைத்ததால், தொடர்ந்து இந்த நெல்லை பயிரிட்டு வருகின்றனர்.
முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் நெல் நடவுக்கு முன் வயலில் இயற்கை உரம் ஏற்றும் விதத்தில், தக்கை பூண்டு போட்டு உழுவதன்மூலம் இயற்கை உரம் கிடைக்கும்.
இதன் காரணமாக மாவட்ட அளவில் 2,500 ஏக்கரில் தக்கை பூண்டு சாகுபடி செய்துள்ளனர். இதற்காக மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க அரசு 51.7 டன் தக்கை பூண்டு விதை வழங்கியுள்ளது. இந்த பயிரை மண்ணில் மடக்கி உழுவதன் மூலம் மண்வளம் காக்கப்படும்.
கிணற்று பாசனம் மூலம் நெல் நடவு பரப்பு, விளைச்சல் அதிகரித்து காணப்படும். அந்த வகையில் கிணற்று பாசனம் மூலம் நெல் நடவு செய்ய உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் தக்கை பூண்டு சாகுபடி செய்ய ஏக்கருக்கு 20 கிலோ வரை தக்கை பூண்டு விதையை ரூ.1000 மானியத்தில் விற்பனை செய்கின்றனர்.
தக்கை பூண்டு சாகுபடி பரப்பினை தேவகோட்டை பகுதியில் கலெக்டர் ஆஷா ஆஜித், வேளாண்மை இணை இயக்குனர் லட்சுமி பிரபா, வேளாண்மை அதிகாரி மதுரைச்சாமி ஆகியோர் பார்வையிட்டனர்.

