/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை கண்மாய்களில் 29000 பறவைகள்: வனத்துறை கணக்கெடுப்பு
/
சிவகங்கை கண்மாய்களில் 29000 பறவைகள்: வனத்துறை கணக்கெடுப்பு
சிவகங்கை கண்மாய்களில் 29000 பறவைகள்: வனத்துறை கணக்கெடுப்பு
சிவகங்கை கண்மாய்களில் 29000 பறவைகள்: வனத்துறை கணக்கெடுப்பு
ADDED : மார் 13, 2025 05:02 AM

திருப்புத்துார்: சிவகங்கை மாவட்ட நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பில் 129 வகையான 29 ஆயிரம் பறவைகள் இருப்பது தெரியவந்துள்ளது. அரிதாக சில பெலிகன் பறவைகளும் காணப்பட்டன.
திருப்புத்துார் அருகே உள்ள வேட்டங்குடி பறவைகள் சரணாலய கொள்ளுக்குடி கண்மாய்கள் உள்ளிட்ட மாவட்ட அளவிலான 25 கண்மாய்களில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு மார்ச் 8,9 நாட்களில் நடந்தது. முதல் நாள் கொள்ளுக்குடிப்பட்டி பறவைகள் சரணாலயத்தில் பார்வையாளர் மையத்தில் கணக்கெடுக்கும் பணிக்கு தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
உதவி வனப்பாதுகாப்பு அலுவலர் மணிகண்டன், வன அலுவலர் கார்த்திகேயன் பயிற்சி அளித்தனர். திருப்புத்தூர் ஆ.பி.சீ.அ.கல்லுாரி, காரைக்குடி அழகப்பா அரசு கல்லுாரி, சிவகங்கை அரசு பெண்கள் கல்லுாரி, காரைக்குடி சேதுபாஸ்கரா வேளாண் கல்லுாரிகளைச் சேர்ந்த 80 மாணவ, மாணவியர்கள், வனத்துறை பணியாளர்கள் 45 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
மார்ச் 9ல் மாவட்டமெங்கும் 25 கண்மாய்களில் கணக்கெடுப்பு நடந்தது.
கணக்கெடுப்பில் 129 வகையான கொக்கு, நாரை, வாத்து இன பறவைகள் 29 ஆயிரத்திற்கு அதிகமாக இருந்தது தெரியவந்தது. அதில் வாத்துக்கள் அதிகமாக காணப்பட்டது. வெள்ளை அரிவாள் மூக்கன், கருப்பு அரிவாள் மூக்கன், நத்தை கொத்தி நாரை பறவைகள் அதிகமாக இருந்தது. வழக்கத்தை விட கரண்டி வாயன் பறவைகள் கூடுதலாக வந்திருந்தன.
மானாமதுரை ஆழிமதுரையிலும், கீழ்பாத்தி கண்மாயிலும் பெலிகன் எனப்படும் சில கூழைக்கடா பறவைகள் காணப்பட்டன. கடந்த ஆண்டுகளை விட கூடுதலான பறவைகள் வந்திருந்ததும், சரணாலயத்தில் வழக்கமாக கூடுகளில் 1,2 முட்டைகள் இடும் பறவைகள் இந்த ஆண்டு 3,4 முட்டைகள் இட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.