சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பள்ளி வாகனங்கள் ஆய்வில் குறைபாடுடைய 30 வாகனங்கள் இயக்க அனுமதி மறுக்கப்பட்டது.
மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் உள்ள 101 தனியார் பள்ளிகளில் 569 வாகனங்கள் ஓடுகின்றன. இந்த வாகனங்கள் ஆண்டு பரிசோதனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நேற்று மாலை சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கோட்டாட்சியர் விஜயகுமார் தலைமையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்தனர்.
இதில், 329 வாகனங்கள் பங்கேற்றதில், சிவகங்கையில் 134, காரைக்குடியில் 165 வாகனங்கள் என 299 வாகனங்களை பரிசோதனை செய்தனர். இதில், குறைபாடுடன் வந்த 30 வாகனங்களை இயக்க கூடாது என எச்சரிக்கையுடன் அனுப்பி வைத்தனர்.
மேலும், குறைபாடுகளை நிவர்த்தி செய்து காண்பித்து, ஒப்புதல் பெற்ற பின்னரே பள்ளியில் மாணவர்களை அழைத்து செல்ல இயக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன், போக்குவரத்து ஆய்வாளர்கள் மாணிக்கம், விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.