/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சம்பா பருவ சாகுபடிக்கு 8462 டன் உரம் இருப்பு
/
சம்பா பருவ சாகுபடிக்கு 8462 டன் உரம் இருப்பு
ADDED : ஆக 12, 2024 11:54 PM
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் சம்பா பருவ சாகுபடிக்கு தேவையான 8462 டன் உரம் கோடவுன்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி, சம்பா பருவ சாகுபடி செய்ய விவசாயிகள்தயார்நிலையில் உள்ளனர். விவசாயிகளுக்கு தேவைப்படும் நெல் ரகங்கள் 140 டன், கேழ்வரகு 200 கிலோ, உளுந்து 8 ஆயிரம் கிலோ, நிலக்கடலை 10,900 கிலோ, எள் 315 கிலோ வேளாண் விரிவாக்க மையங்களில் வினியோகம் செய்யப்படும். நெல் ரகங்களான பி.பி.டி., என்.எல்.ஆர்., ஆர்.என்.ஆர்., மற்றும் பிற நெல் ரகங்கள் 220 டன் வரை இருப்பு உள்ளது.
தனியார் உரக்கடைகளில் சான்று பெற்ற விதைகள் இருப்பு உள்ளது.நெல் விதைப்பிற்கு பின் தேவைப்படும் யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உரங்கள் அனைத்து தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களில் இருப்பு உள்ளது. இம்மாவட்டத்தில் ஏப்ரல்முதல் யூரியா 3134, டி.ஏ.பி., 610, பொட்டாஷ் 490, காம்ப்ளக்ஸ் 1254 டன் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
வேளாண் உர கோடவுன்களில் தற்போது யூரியா 4699, டி.ஏ.பி., 999, பொட்டாஷ் 525, காம்ப்ளக்ஸ் 2239 டன் வரை இருப்பு உள்ளது. கடந்த ஆண்டை விட இரு மடங்கு உரம் இருப்பில் உள்ளது.
நெல்லுக்கு தேவைப்படும் சூடோமோனாஸ் மற்றும் டி விரிடி மருந்துகள் உள்ளது. எம்.என்., மிக்சர் 97 டன், திரவ உயிர் உரங்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நெல்லுக்கு தேவையான களைக்கொல்லி, பூச்சி மருந்துகள் தனியார் உரக்கடைகளில் 2,750 லிட்டர் வரை இருப்பு உள்ளது. இம்மாவட்ட விவசாயிகள் உரங்கள், பூச்சி மருந்துகளை பெற்று, நெல் விளைச்சலை அதிகரிக்க செய்ய வேண்டும், என்றார்.

