ADDED : செப் 13, 2024 05:18 AM

திருப்புவனம்: திருப்புவனம் அருகே மணலுாரில் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு மூன்று மணி நேரமாக தண்ணீர் வெளியேறியது.
திருப்புவனம் வைகை ஆற்றுப்படுகையில் இருந்து மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
சக்குடி விலக்கு அருகே மணலுாரில் நான்கு வழிச்சாலையை ஒட்டி மதுரை கிழக்கு ஒன்றிய பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்ல மதுரை மாநகராட்சியின் குடிநீரேற்று நிலையம் செயல்படுகிறது. நேற்று மதியம் 1:30 மணிக்கு மதுரைக்கு குடிநீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் அதிக அழுத்தத்துடன் வெளியேறியது.
நீரேற்று நிலையத்தில் உள்ள மாநகராட்சி ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தும் பழுதை சரி செய்ய எந்த நடவடிக்கையும் இல்லை. மதியம் 3:30 மணி வரை உடைப்பில் இருந்து தண்ணீர் வெளியேறியது. பொதுமக்கள் உடைப்பை சரி செய்ய முயன்றும் அதிக அழுத்தம் காரணமாக சரி செய்ய முடியவில்லை. நீண்ட நேரம் கழித்து குடிநீர் விநியோகத்தை நிறுத்தி விட்டு ஊழியர்கள் பழுதை சரி செய்தனர். இந்த இடத்தில் அடிக்கடி குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. குடிநீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் குடிநீர் வீணாகி வருவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

