/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குப்பை கிடங்கான தேசிய நெடுஞ்சாலை
/
குப்பை கிடங்கான தேசிய நெடுஞ்சாலை
ADDED : மே 24, 2024 02:29 AM

திருப்புவனம்: திருப்புவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய இடத்தை குப்பை கிடங்காக ஊராட்சி நிர்வாகம் மாற்றி வருகிறது.
தொண்டி- மூணாறு தேசிய நெடுஞ்சாலை திருப்புவனம் வழியாக செல்கிறது. தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்ட பின் சாலையை மேம்படுத்தும் பணியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மடப்புரம் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பையை வடகரை விலக்கில் கொண்டு வந்து கொட்டுகின்றனர். நாளுக்கு நாள் அதிகரிக்கும் குப்பையால் சுகாதாரக்கேடு நிலவி வருகிறது. குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை குப்பைக்கு உள்ளாட்சி ஊழியர்களே தீ வைப்பதால் அடர் புகைமூட்டம் எழுந்து சுற்றுப்புற சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த குப்பை கிடங்கு அருகே எரிவாயு விற்பனை மையம் அமைந்துள்ளது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்க 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் சிலிண்டர்கள் ஏற்றப்பட்டு அனுமதிக்காக இங்கு காத்திருப்பது வழக்கம். குப்பைக்கு வைக்கப்படும் தீயால் பெரிய அளவில் தீ விபத்து ஏற்படவும் வாய்ப்புண்டு.
பலமுறை குப்பை கொட்டுவதற்கு இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகம் இன்று வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் வடகரை விலக்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் அரசு ஆண்கள் பள்ளியும் செயல்பட்டு வருகிறது. குப்பையால் எழும் புகை மூட்டத்தால் மாணவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த இடத்தை கடந்து தான் மடப்புரம் காளி கோயிலுக்கும் செல்ல முடியும். குப்பை கிடங்கை கடந்து செல்ல முடியாமல் பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் வடகரை விலக்கில் குப்பை கொட்டி தீ வைப்பதை தடுத்து நிறுத்தி சுகாதாரம் பேண வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.