/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கூரையில்லாத வாரச்சந்தை: வெயிலில் தவிக்கும் மக்கள்
/
கூரையில்லாத வாரச்சந்தை: வெயிலில் தவிக்கும் மக்கள்
ADDED : ஆக 26, 2024 05:28 AM

திருப்புத்துார்:
திருப்புத்துார் வாரச்சந்தையில் பொதுமக்கள் நடமாடும் பகுதியில் கூரை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்புத்துாரில் வாரச்சந்தை காரைக்குடி ரோட்டில் பேரூராட்சி அலுவலகம் அருகில் இயங்குகிறது.
நீண்ட காலமாக நடைபெறும் இந்த சந்தையில் முன்பு காலை முதல் மாலை வரை கூட்டம் அதிகமாக இருக்கும். கொரோனாவிற்கு பின்னர் புதிய கட்டட வசதியுடன் இந்த வாரச்சந்தை இயங்க துவங்கியது. ஆனால் தற்போது வாரச்சந்தையில் முன்பு போல் பகலில் வியாபாரம் நடப்பதில்லை.
முன்பு இந்த சந்தை வளாகத்தில் பல மரங்கள் இருந்தன. அதன் நிழலில் மக்கள் காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்கினர்.
தற்போது கடைகளுக்கிடையில் கூரை இல்லை. நிழல் தரும் மரங்களும் இல்லை. பொதுமக்களை வெயில், மழையிலிருந்து பாதுகாக்க பாலிதீன் சீட்களை வியாபாரிகள் கூரையாக கட்டியுள்ளனர். இருப்பினும் வெயிலுக்கு பயந்து மக்கள் பகலில் வாரச்சந்தைக்கு வராமல், மாலையில் வருகின்றனர்.
இது குறித்து பேரூராட்சி அதிகாரிகள் கூறியதாவது, வாரச்சந்தை மற்றும் பஸ் ஸ்டாண்ட் பயணியர் வசதிக்காக மேற்கூரை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வாரச்சந்தையில் கூரை அமைக்க ரூ. 50 லட்சம் மதிப்பில் திட்டம் தயாரித்து, அனுமதிக்காக அனுப்பியுள்ளோம், என்றனர்.