/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழடி அகழாய்வில் தொடர்ச்சியாக கிடைக்கும் சிவப்பு நிற பானைகள்
/
கீழடி அகழாய்வில் தொடர்ச்சியாக கிடைக்கும் சிவப்பு நிற பானைகள்
கீழடி அகழாய்வில் தொடர்ச்சியாக கிடைக்கும் சிவப்பு நிற பானைகள்
கீழடி அகழாய்வில் தொடர்ச்சியாக கிடைக்கும் சிவப்பு நிற பானைகள்
ADDED : செப் 14, 2024 02:17 AM

கீழடி:கீழடி அகழாய்வில் தொடர்ச்சியாக கிடைத்து வரும் அடர் சிவப்பு நிற பானைகளின் பயன்பாடு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கீழடியில் 10ம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. இதில் தா என்ற தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு, மீன் உருவ பானை ஓடுகள், சுடுமண் குழாய்கள், செங்கல் கட்டுமானம், பாசிகள், கண்ணாடி மணிகள் என குறைந்த அளவு பொருட்களே கிடைத்து வருகின்றன.
தமிழகத்தில் வெம்பக்கோட்டை, பொற்பனை கோட்டை உள்ளிட்ட இடங்களில் நடந்து வரும் அகழாய்வில் ஏராளமான பொருட்கள் கண்டறியப்பட்டு அந்தந்த பகுதி தொல்லியல் ஆய்வாளர்களே பொருட்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர்.
ஆனால் கீழடி தளத்திற்கு தனியாக இயக்குனர் நியமிக்கப்பட்டும் குறிப்பிடத்தக்க அளவு பொருட்கள் கிடைக்காததுடன் சுடுமண் பானைகள் உள்ளிட்டவை சேதமடைந்தும் வருகின்றன.
கீழடி 10ம் கட்ட அகழாய்வில் இரண்டு அடி உயரத்தில் அடர் சிவப்பு நிற பானை கண்டறியப்பட்டுள்ளது. இந்த அகழாய்வு நடந்து வரும் இடத்தின் அருகே ஏழாம் கட்ட அகழாய்வு நடத்தப்பட்டு அதில் இதே போன்ற சிவப்பு நிற கொள்கலன் கண்டறியப்பட்டது.
பண்டைய காலத்தில் நெல் உள்ளிட்ட தானிய வகைகளை சேமிக்க ஏற்படுத்தப்பட்ட பானைகள் என கருதப்படுகின்றன. இதுவரை பானைகளின் உள்ளே உள்ள பொருட்கள் குறித்து தொல்லியல் துறை எந்த வித விளக்கமும் தரவில்லை. ஏழாம் மற்றும் 10ம் கட்ட அகழாய்வில் கிடைத்த சிவப்பு நிற பானைகளினுள் உள்ள பொருட்கள் ஒரே மாதிரியாக இருந்தால் இந்த இடத்தில் ஒரே கால கட்டத்தைச் சேர்ந்த மக்கள் வசிப்பிடமாக இருந்திருக்க கூடும்.
7ம் கட்ட அகழாய்விலும் மூடியுடன் கூடிய வெளிர்சிவப்பு நிற பானை கண்டறியப்பட்டது.
10ம் கட்ட அகழாய்வில் அதே அளவில் கிடைத்த பானை தான் சேதமடைந்தது.
எனவே பானைகள் சேதமடையாமல் இருந்தால் ஒரே கால கட்டத்தைச் சேர்ந்த பொருட்கள் என கண்டறிய வாய்ப்பு இருந்திருக்கும்.