/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குளம் இல்லாத கிராமம்... தரம் உயர்த்தப்படாத பள்ளி: தி. சூரக்குடி ஊராட்சியின் அவலம்
/
குளம் இல்லாத கிராமம்... தரம் உயர்த்தப்படாத பள்ளி: தி. சூரக்குடி ஊராட்சியின் அவலம்
குளம் இல்லாத கிராமம்... தரம் உயர்த்தப்படாத பள்ளி: தி. சூரக்குடி ஊராட்சியின் அவலம்
குளம் இல்லாத கிராமம்... தரம் உயர்த்தப்படாத பள்ளி: தி. சூரக்குடி ஊராட்சியின் அவலம்
ADDED : செப் 11, 2024 12:14 AM

காரைக்குடி : காரைக்குடி அருகே உள்ள தி. சூரக்குடி ஊராட்சியில், குளம் இல்லாத கிராமம், தரம் உயர்த்தப்படாத பள்ளி, துார்வாரப்படாத குடிநீர் ஊரணி உள்ளிட்டவற்றை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட தி. சூரக்குடி ஊராட்சியில் ஆவுடைப்பொய்கை, நங்கபட்டி, பூவாண்டிபட்டி, திருவேலன்குடி, தி.சூரக்குடி, சொக்கம்பட்டி, மாலையிட்டான் பட்டி, நெற்புகப்பட்டி ஆகிய சிற்றுார் உள்ளது.
2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தி.சூரக்குடி ஊராட்சியில் உள்ள ரகு தீர்த்த மண்டப ஊரணி சுற்றுவட்டார கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்த ஊரணியை முழுமையாக துார்வார வேண்டும். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். நங்கபட்டி கிராமத்தில் மக்களின் தேவைக்காக குளம் அமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மக்கள் எழுப்பியுள்ளனர்.
கே.ஆர்.ராமசாமி, முன்னாள் பா.ஜ., மாவட்ட செயலாளர் கூறுகையில்:
புராதான கால சூரிய நாராயண கோயில் இங்கு உள்ளது. அக்கோயிலின் அருகில் ரகுதீர்த்த மண்டப ஊரணி உள்ளது.சுவை மிக்க இந்த ஊரணி சுற்று வட்டார பல கிராமங்களில் குடிநீர் சேவையை இன்றுவரை பூர்த்தி செய்து வருகிறது. ஊரணி பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் கிடக்கிறது. அடிக்கடி சுத்தம் செய்யப்பட்டாலும் முழுமையாக தூர்வாரி சுற்றுச் சுவர் அமைத்து தரவேண்டும். தவிர, உயர்நிலைப்பள்ளி மட்டுமே உள்ளதால்,
மாணவர்கள் காரைக்குடி பள்ளத்துார் உட்பட வெளியூர் சென்று படிக்க வேண்டியுள்ளது.
மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தினால் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும். நங்கம்பட்டி கிராமத்தில் இதுவரை குளம் இல்லை. குளம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊராட்சித் தலைவர் முருகப்பன் கூறுகையில்:
ரகு தீர்த்த மண்டப ஊரணியில் அவ்வப்போது சுத்தம் செய்யும் பணி நடைபெறுகிறது. முழுமையாக துார் வாரவும் ஊரணி பாதுகாப்பிற்கு சுற்றுச் சுவர் எழுப்புவதற்கும் அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளோம் விரைவில் பணி நடைபெற உள்ளது.
நங்கபட்டியில் குளம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்வதற்கு வருவாய்த் துறையினரை வலியுறுத்தியுள்ளோம். அளவிடும் பணி முடிந்ததும் குளம் வெட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்திட சம்மந்தப்பட்ட துறையினரிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் கோரிக்கை வைத்துள்ளோம்.

