/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் ஆவின் வரத்து குறைந்தது
/
காரைக்குடியில் ஆவின் வரத்து குறைந்தது
ADDED : மார் 08, 2025 05:23 AM
காரைக்குடி : காரைக்குடி ஆவின் பூத்களுக்கு பால் வரத்து குறைந்ததால் வாடிக்கையாளர்கள் சிரமப்படுகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் 75 சதவீதம்,ராமநாதபுரத்தில் 25 சதவீதம் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து நாள் ஒன்றுக்கு 60 ஆயிரம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்பட்டு ஆவின் மூலம் பால் விற்பனை செய்யப்படுகிறது. காரைக்குடி பகுதியில் உள்ள 60க்கும் மேற்பட்ட ஆவின் பூத்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பால் விற்பனை செய்யப்படுகிறது.
வயலட் நிற பால் பாக்கெட் தரமற்று புளித்த சுவையுடன் இருப்பதாக நுகர்வோர் தொடர்ந்து புகார் கூறி வந்தனர். இதனால் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்களை மக்கள் அதிகம் வாங்கி வருகின்றனர். தற்போது ஆவின் பூத்களில், பால் வரத்து குறைந்துள்ளதோடு கோயில் விழாக்கள் துவங்கியுள்ளதால் தேவையும் அதிகரித்து விட்டதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
வாடிக்கையாளர்கள் கூறுகையில்: ஆவின் வயலட் நிற பாக்கெட் குறித்து புகார் எழுந்த நிலையில் இதுவரை அது சரி செய்யப்படவில்லை.
ஆண்டுதோறும் முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவின்போது ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கம்.
ஆனால் திருவிழா தொடரும் முன்பே பால் வரத்து குறைந்துள்ளது. ஏஜன்ட்களிடம் கேட்டால் குறைவாக வருவதாக தெரிவிக்கின்றனர். சிறிது தாமதமாக சென்றால் கூட மக்களுக்கு பால் கிடைப்பதில்லை என்கின்றனர். பால் தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொது மேலாளர் ராஜசேகர் கூறுகையில்: வெயில் காலம் என்பதால் ஆயிரம் லிட்டர் வரை பால் வரத்து குறைந்துள்ளது. தவிர, கோயில் திருவிழா காலம் என்பதால் பால் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. கிராமங்களில், கூடுதலாக சென்டர்கள் அமைக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு முறையாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.