காரைக்குடி : காரைக்குடியின் பல முக்கிய சாலைகளில் விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
காரைக்குடி கல்லுாரி சாலை சுப்பிரமணியபுரம் டி.டி.நகர் ராஜீவ் காந்தி சிலை உட்பட நகரில் பல பகுதிகளிலும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி சார்பில் சாலை பராமரிப்பு பணி நடந்தது.
இதில் நகரின் பிரதானசாலைகள் உட்புற சாலைகளில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளன. சாலையில் அமைக்கப்படும் வேகத்தடைகள் சாலை பாதுகாப்பு விதிகளை படி அமைக்க வேண்டும். பள்ளி கல்லூரி மருத்துவமனை சுங்கச்சாவடிபகுதியில் மட்டுமே வேகத்தடை அமைக்க வேண்டும்.
தவிர, குறிப்பிட்ட அளவு உயரம் நீளத்தில் மட்டுமே வேகத்தடை அமைக்க வேண்டும். தவிர, வேகத்தடை இருப்பது குறித்து எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும். ஆனால் காரைக்குடி நகரின் பல பகுதிகளிலும் விதிமுறைகளை மீறி வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.
உயரமான வேகத்தடையில் கார் உள்ளிட்ட வாகனங்கள் சிக்குவதோடு பைக் ஓட்டி வருபவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். வேகத்தடைகளில் வெள்ளை நிற கோடுகள் இல்லாததால் பலருக்கு வேகத்தடை இருப்பதே தெரிவதில்லை. இதனால்அடிக்கடி விபத்து நடக்கிறது.

