/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆதிதிராவிடர் விடுதி மாணவருக்கு மாதாந்திர உதவித்தொகை இழுபறி
/
ஆதிதிராவிடர் விடுதி மாணவருக்கு மாதாந்திர உதவித்தொகை இழுபறி
ஆதிதிராவிடர் விடுதி மாணவருக்கு மாதாந்திர உதவித்தொகை இழுபறி
ஆதிதிராவிடர் விடுதி மாணவருக்கு மாதாந்திர உதவித்தொகை இழுபறி
ADDED : செப் 17, 2024 09:54 PM
சிவகங்கை:தமிழகத்தில் ஆதிதிராவிடர் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கென விடுதி செயல்படுகிறது. இங்கு படிப்போருக்கு, அரசு உணவு படியை ஒதுக்கி விடுகிறது. சோப்பு, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொள்ள, அரசு பள்ளி மாணவருக்கு மாதம், ரூ.100, கல்லுாரி மாணவருக்கு மாதம் ரூ.150 வீதம் வழங்க வேண்டும்.
பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆதிதிராவிடர் தனி தாசில்தார் அலுவலகங்களில், மாணவர்களுக்கு வழங்கும் இத்தொகையில், பல கோடி ரூபாய் வரை முறைகேடு செய்துள்ளதாக, எஸ்.சி., ஆணையத்திற்கு புகார் சென்றது.
இதையடுத்து, அந்தந்த மாணவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக, ஆதிதிராவிடர் நல இயக்குனர் அலுவலகத்தில் இருந்து, மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவித்தனர்.
அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகம் மூலம், மாணவர்களின் ஆதார் கார்டு நகல், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விபரங்களை அனுப்பினர். ஆனால், கடந்த ஆறு மாதமாக சோப்பு, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வாங்கி கொள்ள, அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என புகார் எழுந்துள்ளது. ஆதிதிராவிடர் நல விழிப்பு, கண்காணிப்பு கூட்டமைப்பு தலைவர், ஏ.பூமிநாதன் கூறியதாவது: விடுதி மாணவர்கள் வங்கி கணக்கு எண் பெற்றதில், குளறுபடி இருப்பதாக கூறி, பணத்தை விடுவிக்காமல் உள்ளனர். இது குறித்து, செப்., 5 ல் ஆதிதிராவிடர் நல செயலரிடம் புகார் செய்துள்ளேன். கடந்த ஆறு மாதமாக மாணவர்களின் வங்கி கணக்கிற்கு உதவி தொகை வரவில்லை, என்றார்.