/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சுதி இல்லாமல் சுற்றி வரும் அ.தி.மு.க., தொண்டர்கள்
/
சுதி இல்லாமல் சுற்றி வரும் அ.தி.மு.க., தொண்டர்கள்
ADDED : மார் 27, 2024 06:56 AM
சிங்கம்புணரி : தேர்தல் அறிவித்து ஒரு வாரத்தை கடந்தும் சிங்கம்புணரியில் அ.தி.மு.க., தொண்டர்கள் சுதி இல்லாமல் சுற்றி வருகின்றனர்.
அ.தி.மு.க.,வை பொறுத்தவரை சிங்கம்புணரியில் சொந்தமாக கட்சி அலுவலகம் இல்லாவிட்டாலும் கூட தேர்தல் அறிவிப்பதற்கு முன்பாக தற்காலிக கடையை வாடகைக்கு எடுத்து கட்சி அலுவலகமாக மாற்றி விடுவர். தினசரி தொண்டர்களுக்கு டீ, வடை என உபசரிப்பு நடக்கும். நாளிதழ், டிவி என அனைத்து வசதிகளும் அங்கேயே கிடைக்கும். பல தொண்டர்கள் வீடுகளுக்கு கூட செல்லாமல் கட்சி அலுவலகத்திலேயே தங்கிக் கொள்வர்.
இந்நிலையில் தற்போது லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டு ஒருவாரத்தைக் கடந்தும் சிங்கம்புணரி பகுதியில் அ.தி.மு.க., வினர் சுதி இல்லாமல் உள்ளனர். வேட்பாளராக காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்த சேவியர் தாஸ் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் சிங்கம்புணரி பகுதிக்கு இன்னும் வந்து தொண்டர்களை சந்திக்கவில்லை.
வேட்பாளர் வரட்டும்...! வேட்பாளர் வரட்டும்...! என்று நிர்வாகிகள் காத்திருக்கின்றனர். ஆனால் தொண்டர்கள் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் கடைவீதிகளில் சுதியில்லாமல் சுற்றி வருகின்றனர். ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருக்கும்போது எப்படி இருந்த கட்சி.. இன்று இப்படி ஆகிவிட்டது என்று பல தொண்டர்கள் வெளிப்படையாகவே புலம்பி தீர்க்கின்றனர்.

