ADDED : ஆக 29, 2024 05:15 AM
திருப்புவனம்: திருப்புவனத்தில் தேரோடும் வீதியில் சிலர் கட்டடங்கள், மரங்கள் வளர்க்க முயற்சி செய்வதால் தேரோட்டத்தின் போது இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது என பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா பிரசித்தி பெற்றது.பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று அம்மனையும் சுவாமியையும் வழிபட்டு செல்வர்.
திருவிழாவின் கடைசி நாள் தேரோட்டம் நடைபெறும்.தேர்கள் மார்க்கெட் வீதி, தேசிய நெடுஞ்சாலை, திதி பொட்டல் வழியாக மீண்டும் நிலையம் வந்தடையும். தேரோடுவதற்கு வசதியாக நான்கு மாட வீதிகளிலும் தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திதி பொட்டல் உள்ளிட்ட இடங்களில் சிலர் ரோட்டை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியும், மரங்கள் வளர்க்க முயற்சி செய்கின்றனர்.
தேரோட்டத்தின் போது விபத்து ஏற்பட வாய்ப்புண்டு. ஏற்கனவே பலரும் ஆக்கிரமித்ததால் தேரோட்டத்தின் போது ஆக்கிரமிப்புகளை அகற்றி அதன்பின் தேரோட்டம் நடத்தப்படும், தற்போது நிரந்தரமாக ஆக்கிரமிக்க சிலர் முயற்சிக்கின்றனர். எனவே பேரூராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

