/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பயிர்களை பூஞ்சான நோயில் இருந்து பாதுகாக்க வேளாண்துறை ஆலோசனை
/
பயிர்களை பூஞ்சான நோயில் இருந்து பாதுகாக்க வேளாண்துறை ஆலோசனை
பயிர்களை பூஞ்சான நோயில் இருந்து பாதுகாக்க வேளாண்துறை ஆலோசனை
பயிர்களை பூஞ்சான நோயில் இருந்து பாதுகாக்க வேளாண்துறை ஆலோசனை
ADDED : செப் 18, 2024 06:21 AM
சிவகங்கை, : சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பயிர்களை விதை மூலம் பரவக்கூடிய பூஞ்சான நோய்களில் இருந்து பாதுகாக்க, விதையுடன் பூஞ்சான மருந்து கலந்து விதை நேர்த்தி செய்து பயன்பெற வேண்டும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: பயிர்களில் விதை மூலம் பரவக்கூடிய பூஞ்சான நோய்களிலிருந்து பாதுகாப்பதற்கு விதையுடன் பூஞ்சான மருந்து கலந்து விதை நேர்த்தி செய்திடல் வேண்டும்.
மேலும், விதை மூலம் பரவும் இலை புள்ளி, கருகல், உறை அழுகல் மற்றும் குலை நோய் போன்ற பூஞ்சான நோய்களை தடுக்க 1 கிலோ விதைக்கு 2 கிராம் வீதம் கார்பன்டைசிம் கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து பின் விதைக்க வேண்டும்.
ரசாயன மருந்து மூலம் விதை நேர்த்தி செய்வதை விரும்பாத விவசாயிகள், 1 கிலோ விதைக்கு, 4 கிராம் வீதம் ”டிரைக்கோடெர்மாவிரிடி அல்லது 1 கிலோ விதைக்கு, 10 கிராம் வீதம் ”சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ்” என்ற உயிரியல் பூஞ்சான மருந்தினை விதைப்பதற்கு முன் விதையுடன் கலந்து விதைக்க வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு தேவையான விதைக்கு, விதை நேர்த்தி செய்ய ரூ.10 முதல் 20 வரை செலவாகும். விதை நேர்த்தி செய்வதன் பயனாக, பயிர் வளர்ச்சி காலத்தில் நோய்கள் தாக்கி, அவற்றை கட்டுப்படுத்த மருந்திற்கு செலவு செய்ய அவசியம் இல்லை. நெல், சிறுதானியங்கள், பருத்தி, கரும்பு, எள் மற்றும் சூரியகாந்தி பயிர்களுக்கு உயிர் உர விதை நேர்த்தி செய்வதற்கு ஏக்கருக்கு உயிர் உரங்களான திரவ அசோஸ்பைரில்லம் 50 மிலி., திரவ பாஸ்போபாக்டிரியா 50 மிலி., மற்றும் திரவ பொட்டாஸ் பாக்டிரியா 50 மிலி., வீதம் பூஞ்சான விதை நேர்த்தி செய்த விதையுடன் கலந்து நிழலில் 30 நிமிடம் உலர்த்தி பின்பு விதைக்க வேண்டும்.
நிலக்கடலை மற்றும் பயறு வகை பயிர்களுக்கு உயிர் உரங்களான திரவ ரைசோபியம் 50 மிலி., திரவ பாஸ்போபாக்டிரியா 50 மிலி., மற்றும் திரவ பொட்டாஸ் பாக்டிரியா 50 மிலி., வீதம் பூஞ்சான விதை நேர்த்தி செய்த விதையுடன் கலந்து நிழலில் 30 நிமிடம் உலர்த்திய பின்பு விதைக்க வேண்டும். உயிர் உரங்கள் மூலம் விதை நேர்த்தி செய்வதால், உயிர் உரங்கள் காற்றிலுள்ள தழை சத்தை கிரகித்து பயிருக்கு கொடுக்கும்.
அதனால், இளம் பயிரின் இலைகள் கரும்பச்சை நிறத்துடன் செழிப்பாக வளரும். கூடுதல் மகசூல் கொடுப்பதால் கால் பங்கு தழைச்சத்து இடுவதை குறைக்கலாம். அதன் மூலம் உரச்செலவு குறையும். உயிர் பூஞ்சான கொல்லிகள் மற்றும் திரவ உயிர் உரங்கள் அனைத்தும் மாவட்டத்தின் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் தேவையான உயிர் பூஞ்சான கொல்லிகள் மற்றும் திரவ உயிர் உரங்களை வாங்கி, தங்களது விவசாயத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். விவசாயிகள் பயிர் பாதுகாப்பு மருந்துகள் மற்றும் உர செலவை குறைக்க விதை நேர்த்தி செய்து விதைத்து பயன்பெறலாம், என்றார்.