/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தார் ஊற்றி மறைத்தும் தாங்காத பாலம்
/
தார் ஊற்றி மறைத்தும் தாங்காத பாலம்
ADDED : செப் 09, 2024 05:35 AM

சிங்கம்புணரி ; சிங்கம்புணரி அருகே தரம் குறைவாக கட்டப்பட்ட பாலத்தில் ஏற்பட்டுள்ள வெடிப்புகளை தார் ஊற்றி மறைக்க முயன்றும் பலன் தராததால் அதிகாரிகள் திணறுகின்றனர்.
இவ்வொன்றியத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு சிவபுரிபட்டி, முறையூர் உள்ளிட்ட இடங்களில் பாலாற்றில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. இது தவிர சிறு பாலம், கால்வாய் பாலங்களும் பல இடங்களில் கட்டப்பட்டது. இவற்றில் பல பாலங்கள் தரம் குறைவாக கட்டப்படுவதாக அப்போதே பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர். ஆனால் முறையான ஆய்வு இல்லாமல் அனைத்து பாலங்களும் கட்டி முடித்து திறக்கப்பட்டது.
இந்நிலையில் சிவபுரிபட்டி, முறையூர் உயர்மட்ட பாலங்களில் மேல்தளத்தில் வெடிப்பு ஏற்பட்டு கான்கிரீட் பெயரத் தொடங்கியது. இதனால் அதிகாரிகள் அவற்றின் மேல் தார் ஊற்றி மறைத்தனர்.
ஆனாலும் தரமற்ற நிலையில் கட்டப்பட்டதால் பாலம் சேதமடைந்து வருகிறது. வரும் மழைக்காலத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பாலத்தின் மேல்தளம் தாங்கி நிற்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
வெடிப்பு ஏற்பட்ட இடங்களில் தாரை கொண்டு பூசாமல், பாலத்தின் உறுதித் தன்மையை முறையாக ஆய்வு செய்து மராமத்து செய்வதுடன், தற்போது நடைபெற்று வரும் எதிர்காலத்தில் நடைபெற இருக்கும் கட்டுமான பணிகளை தரமானதாக கட்டுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.