ADDED : மே 26, 2024 04:16 AM

சிவகங்கை,:சிவகங்கை அருகே அண்ணா நகர் 2வது தெருவில் தேங்கியுள்ள மழை நீரால் பொதுமக்கள் நடந்து செல்வதில் சிரமம் ஏற்படுவதாக கூறுகின்றனர்.
சிவகங்கை அருகே உள்ள வாணியங்குடி ஊராட்சி அண்ணாநகர் 2வது தெரு அரசு போக்குவரத்து பணிமனை எதிரில்உள்ளது. இந்த பகுதியில்50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் தெரு முழுவதும் கழிவு நீருடன் மழைநீர் சேர்ந்து தேங்கியுள்ளது. இப்பகுதி வழியாக மக்கள் கடந்து செல்ல முடியவில்லை.
அப்பகுதியை சேர்ந்த ராமையா கூறியதாவது:
சிவகங்கை நகரின் மிக அருகாமையில் உள்ளது. இந்த பகுதி முழுவதும் கழிவுநீர் செல்வதற்கு கால்வாய் கிடையாது. இங்கு வசிக்ககூடிய மக்கள் தங்கள் வீட்டில் பயன்படுத்தக்கூடிய நீரை வீட்டின் முகப்பு பகுதியில் உறை கிணறு அமைத்து அதில் விடுகின்றனர்.
மழைக்காலத்தில் இந்த கழிவு நீருடன் மழை நீரும் சேர்ந்து தெருக்களில் தேங்கியுள்ளது. ஊராட்சியில் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மாவட்ட நிர்வாகம் எங்கள் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கவும், ரோடு வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.