ADDED : செப் 12, 2024 04:56 AM

திருப்புவனம்: திருப்புவனம் வட்டாரத்தில் போதிய விலையின்மை, தண்ணீர் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் வெற்றிலை விவசாயம் சரிவை நோக்கி செல்வதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்புவனத்தில் பிரதான தொழில் தென்னை மற்றும் வெற்றிலை தான். திருப்புவனம், புதுார், நயினார்பேட்டை, வெள்ளக்கரை, கலியாந்துார் உள்ளிட்ட பகுதிகளில் 400 ஏக்கருக்கு மேல் வெற்றிலை விவசாயம் நடந்து வந்தது. வெற்றிலை விவசாயத்தை கூட்டு தொழிலாக 5 முதல் 10 தொழிலாளர்கள் இணைந்தே மேற்கொள்கின்றனர்.
வெற்றிலை கொடி நடவு செய்ய பாத்தி கட்டுவது முதல் கொடி படர சாரம் கட்டுவது வரை ஆண்களே கூட்டாக இணைந்து வெற்றிலை விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். வெற்றிலை கொடி படர அகத்தி விதை நடவு செய்வதில் தொடங்கி கொடி படர்ந்து வரும் வரை அதனை கண்ணும் கருத்துமாக கவனிக்கின்றனர்.
வெற்றிலை கொடி வளர்வதற்கு முன்பாகவே அகத்தி வளர்ந்து விடும் தினசரி அகத்தி கீரையை அறுவடை செய்து தினசரி வருவாய் பார்ப்பது வழக்கம், திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் திதி, தர்ப்பணம் கொடுக்க வரும் பக்தர்கள் அகத்தி கீரையை கறவை மாடுகளுக்கு தானமாக வழங்குவது வழக்கம்.
அவர்களுக்காக தினசரி அகத்தி கீரை அறுவடை செய்து விற்பனை செய்யப்படுகிறது.திருப்புவனம் புதூர் மற்றும் கோட்டை ஆகிய இரு இடங்களில் வெற்றிலை கொடிக்கால் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. சங்கம் மூலமாக விவசாயிகளுக்கு வெற்றிலை கொடி, நாணல் , கடன் உதவி உள்ளிட்டவை வழங்கப்படும்.
வெற்றிலையில் நோய் தாக்குதல், பனிப்பொழிவால் நஷ்டம், மழையால் கொடிகள் சேதம் உள்ளிட்டவற்றிற்கு எந்த வித இழப்பீடும் கிடைப்பதில்லை. இதனால் பெரும்பாலான விவசாயிகள் வெற்றிலையை விட்டு விட்டு மாற்று தொழிலுக்கு சென்று விட்டனர்.
விவசாயிகள் கூறுகையில்: விவசாய நிலத்தை குத்தகைக்கு வாங்கி வெற்றிலை பயிரிடுகிறோம், குறைந்த பட்சம் 3 ஆண்டு வரை வெற்றிலை கொடிக்கால் இருக்கும் அதன்பின் மீண்டும் வெற்றிலை பயிரிட வேண்டும், வெற்றிலை கொடி படர முதன் முதலில் அகத்தி விதை பயிரிடுவோம், வெற்றிலை விவசாயம் நடவு செய்த ஆறு மாதத்திற்கு பிறகு அறுவடை தொடங்கும் சிறுகாமணி கொடி என்றால் 15 நாட்களுக்கு ஒருமுறையும் நாட்டு வெற்றிலை கொடி என்றால் 30 நாட்களுக்கு ஒருமுறையும் வெற்றிலை அறுவடை நடைபெறும், ஏக்கருக்கு 2ஆயிரம் கிலோ வரை கிடைக்கும், என்றனர்.

