/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு பஸ்களில் வெளியாகும் கரும்புகை
/
அரசு பஸ்களில் வெளியாகும் கரும்புகை
ADDED : ஜூன் 24, 2024 11:43 PM

திருப்புவனம் : திருப்புவனத்தில் இயக்கப்படும் அரசு டவுன் பஸ்கள் பல பராமரிப்பு இன்றி இயக்கப்படுவதுடன் பல டவுன் பஸ்களில் அடர்த்தியான கரும்புகை வெளியாகி சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படுகிறது.
திருப்புவனத்தில் அரசு போக்குவரத்து கழக மதுரை கோட்ட பணிமனை கடந்த 30 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. மொத்தம் 44 டவுன் பஸ்கள் இருப்பதாக சொல்லப்பட்டாலும் 35 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
திருப்புவனத்தைச் சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினசரி இரண்டு முதல் ஆறு முறை மதுரை மத்திய பேருந்து நிலையத்திற்கு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
திருப்புவனம் கிளை பணிமனையில் உள்ள டவுன் பஸ்கள் பலவும் மற்ற கிளை பணிமனைகளில் இருந்து பழுதான பஸ்களையே வாங்கி இப்பகுதியில் இயக்கி வருகின்றனர்.
திருப்புவனம் பணிமனைக்கு கடந்த 17 வருடங்களாக புதிய பஸ்கள் வழங்கப்படவில்லை.திருப்புவனம் பணிமனையில் போதிய வருவாய் கிடைக்காததால் டவுன் பஸ்கள் பலவும் பராமரிப்பின்றியே இயக்கப்படுகிறது. பஸ்களில் முன்புற விளக்கு, உட்புற விளக்கு உள்ளிட்டவைகள் சரிவர எரிவதில்லை.
இந்நிலையில் பராமரிப்பு இன்றி இயக்கப்படும் பஸ்களில் இருந்து அடர்த்தியான கரும்புகை வெளி வருகிறது. அடர்த்தியான கரும்புகை கக்கியபடியே செல்லும் பஸ்களால் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படுவதுடன் மற்ற வாகனங்கள் புகை ரோட்டை மறைப்பதால் விபத்துகளில் சிக்குகின்றன.
அரசு டவுன் பஸ்கள் பின்னால் எந்த வாகனமும் செல்ல முடியவில்லை. அதிகபட்சமாக இரு சக்கர வாகன ஓட்டிகள்தான் புகை கக்கும் டவுன் பஸ்களால் கண் எரிச்சல், சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பணிமனை அதிகாரிகள்கூறுகையில், தினசரி ஆறு லட்ச ரூபாயும், விசேஷ காலங்களில் எட்டு லட்ச ரூபாயும் வருவாய் கிடைத்து வந்தது.200க்கும் மேற்பட்ட கண்டக்டர்கள், டிரைவர்கள் உள்ளனர்.
பஸ்களில் இலவச பயணம் அறிவிக்கப்பட்ட பின் வருவாய் ஒரு லட்சத்து 30 ஆயிரமாக குறைந்து விட்டது. இதனால் பஸ்களை பராமரிக்க முடியவில்லை. பஸ்களை இயக்காமல் நிறுத்தினால் பிரச்னை வரும் என்பதால் வேறு வழியின்றி இயக்குகின்றோம் என்றனர்.