/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பழுதான மின் மீட்டர்களை மாற்றி தருவதில் இழுபறி கூடுதல் மின் கட்டணம் செலுத்துவதாக புகார்
/
பழுதான மின் மீட்டர்களை மாற்றி தருவதில் இழுபறி கூடுதல் மின் கட்டணம் செலுத்துவதாக புகார்
பழுதான மின் மீட்டர்களை மாற்றி தருவதில் இழுபறி கூடுதல் மின் கட்டணம் செலுத்துவதாக புகார்
பழுதான மின் மீட்டர்களை மாற்றி தருவதில் இழுபறி கூடுதல் மின் கட்டணம் செலுத்துவதாக புகார்
ADDED : ஏப் 17, 2024 06:54 AM
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் பழுதான மின் மீட்டர்களுக்கு பதில், புதிய மீட்டர் வழங்க மின்வாரியத்தில் இழுபறி நிலை நீடிப்பதால், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதாக நுகர்வோர்களிடம் புகார் எழுந்துள்ளது.
மாவட்ட அளவில் மின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தின் கீழ், சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்துார், மானாமதுரை உள்ளிட்ட இடங்களில் மின்வாரிய செயற்பொறியாளர், உதவி பொறியாளர் அலுவலகங்கள் செயல்படுகின்றன.
வீடுகளில் பழுதடைந்துள்ள, எரிந்த நிலையில் இருந்த மின்மீட்டர்களை மாற்றித்தர வேண்டிய பொறுப்பு இத்துறைக்கு உண்டு.
2024 ஜன., க்கு பின் ஏராளமான வீடுகளில் மின் மீட்டர் பழுதானதாக புகார் வந்துள்ளது. அந்த மின் மீட்டர்களை மாற்ற மின் பயனீட்டாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆனால், மின்வாரியத்தில் புதிய மின் மீட்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், வீடுகளில் சேதமான மின் மீட்டர்களுக்கு மாற்றாக புதிய மீட்டர் பொருத்தும் பணி தாமதமாகிறது.
ஒரு முறை அளவீடு செய்த கூடுதல் மின் கட்டணத்தையே தொடர்ந்து செலுத்துமாறு, மின் பயனீட்டாளர்களிடம் மின்வாரிய ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால், மின்பயன்பாடே இன்றி எப்படி ஒவ்வொரு முறையும் மின்கட்டணத்தை கூடுதலாக செலுத்த முடியும் என மின் பயனீட்டாளர்கள் கேட்கின்றனர்.
ஒவ்வொரு மாதமும் மின் பயனீட்டாளர், அதிகாரிகள் இடையே வாக்குவாதம் அதிகரித்து வருகிறது.
மீட்டரின்றி ரூ.4,000 கட்டணம்
காஞ்சிரங்கால் பாலமுருகன் கூறியதாவது: ஜனவரியில் என் வீட்டில் இருந்த மின் மீட்டர் பழுதானது. அவற்றை மின்வாரிய அதிகாரிகள் எடுத்து சென்றனர்.
4 மாதங்களாகியும் புதிய மின் மீட்டர் பொருத்தாமல், ஒவ்வொரு முறையும் ரூ.4000 வரை மின் கட்டணம் செலுத்துமாறு வற்புறுத்துகின்றனர்.
எனவே புதிய மின் மீட்டர் பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: பழுதான மின் மீட்டர்களுக்கு மாற்றாக ஜன., வரை காத்திருப்போர் பட்டியலில் உள்ள வீடுகளுக்கு புதிய மின் மீட்டர் பொருத்தி விட்டோம்.
எஞ்சிய 2,500 வீடுகளுக்கு பழுதான மின் மீட்டருக்கு மாற்றாக புதிய மின் மீட்டர் மாற்ற வேண்டும். படிப்படியாக அப்பணி நடைபெறும், என்றார்.

