/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரி சந்தையில் தொடரும் எடை மோசடி
/
சிங்கம்புணரி சந்தையில் தொடரும் எடை மோசடி
ADDED : செப் 08, 2024 04:31 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரி வாரச்சந்தையில் தொடரும் எடை மோசடி காரணமாகபொதுமக்கள் ஏமாறுகின்றனர்.
இப்பேரூராட்சியில் வியாழன் தோறும் வாரச்சந்தை செயல்படுகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட காய்கறி, பழக்கடைகள் அமைக்கப்படுகிறது. அனைத்து வியாபாரிகளும் டிஜிட்டல் தராசுகளையே பயன்படுத்துகின்றனர். சில வியாபாரிகள் எடையை குறைத்து மோசடியில் ஈடுபட்டு வருவதாக புகார் வருகிறது. வாரச்சந்தை மற்றும் வேன்களில் விற்கப்படும் காய்கறிகளை வாங்கி வீட்டில் எடை போட்டு பார்த்தால் 2 கிலோவிற்கு அரை கிலோ வரை குறைவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
டிஜிட்டல் தராசுகளில் தட்டு வைத்த பிறகே பூஜ்ஜியம் எடை செட் செய்ய வேண்டும். ஆனால் வியாபாரிகள் சிலர் தட்டு வைப்பதற்கு முன்பே பூஜ்ஜியத்தை செட் செய்து வைத்து விடுவதால் தட்டின் எடைக்கு ஏற்ற காய்கறி குறைகிறது. எனவே எடையை குறைத்து மோசடியில் ஈடுபடும் வியாபாரிகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.