ADDED : ஆக 29, 2024 11:34 PM
சிவகங்கை, : சிவகங்கை மாவட்டத்தில் தேசிய வங்கி கிளைகள் மூலம் ரூ.17,256 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வங்கியாளர் ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது. 2024---2025ம் ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் வெளியிட காரைக்குடி ஐ.ஓ.பி.,மண்டல துணை மேலாளர் செல்வநாதன் பெற்றுக்கொண்டார்.
மகளிர் திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, கூடுதல் எஸ்.பி., பிரான்சிஸ், ஐ.ஓ.பி., முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன்குமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன், மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி, ரிசர்வ் வங்கி மாவட்ட பொறுப்பாளர் ராதாகிருஷ்ணன், நபார்டு வங்கி மேலாளர் அருண் பங்கேற்றனர்.
கலெக்டர் பேசியதாவது:
சிவகங்கை மாவட்ட தேசிய வங்கி கிளைகள் மூலம் ஒட்டு மொத்தமாக (2024-2025) ரூ.17,256 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.அதில், விவசாய பயிர்கடனாக ரூ.13,374 கோடி, தொழில் வளர்ச்சிக்கு ரூ.1437 கோடி, முன்னுரிமை கடனாக ரூ.207 கோடி, இதர துறைகளுக்கு ரூ.2237 கோடி என அடுத்த ஆண்டிற்கு ரூ.17,256 கோடி வரை கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம், என்றார்.