ADDED : மே 08, 2024 05:48 AM

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் கோடை வெயில் தாக்கத்தால் தென்னை மரங்கள் காயத் தொடங்கியுள்ளது.
இத்தாலுகாவில் சிங்கம்புணரி, பிரான்மலை, மேலப்பட்டி, காளாப்பூர், சதுர்வேத மங்கலம், செட்டிகுறிச்சி, குன்னத்துார் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தென்னை மரங்கள் உள்ளன.
அப்பகுதி விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரமாக தென்னை மரங்களே பல காலமாக இருந்து வருகின்றது. இந்நிலையில் கொளுத்தும் கோடை வெயில் காரணமாக பல தென்னை மரங்கள் காயத் தொடங்கியுள்ளன.
மரங்களில் இருந்து தோகை காய்ந்து விழத் தொடங்கியுள்ளன. இதனால் தேங்காய் விளைச்சலும் குறைந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு தொடர் வறட்சியால் இப்பகுதியில் இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் காய்ந்து சாய்ந்தன.
அதுபோல் மீண்டும் ஒரு நிகழ்வு வந்து விடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் கவலையில் உள்ளனர். கோடை முடிவடைய இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் அதுவரை மரங்கள் தாக்கு பிடிக்குமா என்பது தெரியவில்லை. இதே நிலை நீடித்தால் அடுத்த ஆண்டு தென்னை விவசாயிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள் விவசாயிகள்.

