/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கோடை விவசாயத்திற்கு வயல்களில் வாத்து கிடை
/
கோடை விவசாயத்திற்கு வயல்களில் வாத்து கிடை
ADDED : பிப் 25, 2025 06:52 AM

திருப்புவனம்: திருப்புவனம் வட்டாரத்தில் நெல் அறுவடை முடிவடைந்து வரும் நிலையில் கோடை விவசாயத்திற்காக வயல்களில் வாத்து கிடை அமைப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
திருப்புவனம், திருப்பாச்சேத்தி, பூவந்தி, பழையனுார் உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை நம்பி 10 ஆயிரம் ஏக்கரில் என்.எல்.ஆர்., அண்ணா ஆர் 4, அட்சயா, ஆர்.என்.ஆர்., உள்ளிட்ட நெல் ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது விவசாயிகள் அறுவடை பணியில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகின்றனர். மோட்டார் கிணற்று பாசனம் உள்ள விவசாயிகள் உட்பட பெரும்பாலான விவசாயிகள் கோடை விவசாய பணிகளை தொடங்க உள்ளனர்.
திருப்புவனம் வட்டாரத்தில் கோடை விவசாயம் ஆயிரம் ஏக்கர் வரையே நடைபெறும், கண்மாயில்தண்ணீர் இருப்பை பொறுத்து விவசாயிகள் சாகுபடிக்கு ஆர்வம் காட்டுவார்கள். கோடை விவசாயத்திற்கு பெரும்பாலும் நேரடி விதைப்பு முறையே பயன்படுத்தப்படும், நேரடி விதைப்பிற்கு வயலில் உரம் மற்றும் விதைப்பு பணிக்காக விவசாயிகள் வாத்து கூட்டத்தை பயன்படுத்துகின்றனர்.
அறுவடை செய்த வயல்களில் நெல்மணிகள் ஏராளமாக சிதறி கிடக்கும், நெற்கதிர்களின் வேர்ப்பகுதியும் வயல்களிலேயே இருக்கும், வாத்துகளை வயல்களில் மேய்ச்சலுக்கு விடும் போது வாத்துகள் அலகுகளால் மண்ணை கிளறி நேரடி விதைப்பிற்கு ஏற்றவாறு மாற்றி விடும்.
நெற்கதிர்களின் பாகங்கள் உள்ளிட்டவற்றை வயல்களிலேயே வாத்து அழுத்தி வைத்து விடும், இதனால் வயலுக்கு தேவையான உரம் கிடைத்து விடும். இதனால் விவசாயிகள் அறுவடை செய்த வயல்களில் வாத்துகள் கிடை அமைப்பதில்ஆர்வம் காட்டுகின்றனர்.
பூவந்தி, கலியாந்துார் உள்ளிட்ட பகுதிகளில் பலரும் வாத்துகள் வளர்த்து வருகின்றனர். ஒவ்வொருவரும் ஆயிரம் முதல் மூவாயிரம் வாத்துகள் வரை வளர்க்கின்றனர். ஒரே நேரத்தில் மூவாயிரம் வாத்துகள் வயலில் இறங்குவதால் கோடை கால விதைப்பிற்கு ஏற்றவாறு மாறிவிடுகிறது. கோடை விதைப்பிற்கு விவசாயிகள் குறுகிய கால நெல் விதைகளையே பயன்படுத்துவது வழக்கம்.
எனவே வாத்துகளை வைத்து வயலில் கிடை அமைத்து வருகின்றனர்.வாத்து மேய்ப்பவர்களுக்கும் செலவின்றி மேய்ச்சல் நிலம் கிடைத்து விடுகிறது. இதனால் விவசாயிகள் வாத்து மேய்ப்பவர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.