/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் வறட்சியால் நிலத்தடி நீர்மட்டம் சரிவு
/
சிவகங்கையில் வறட்சியால் நிலத்தடி நீர்மட்டம் சரிவு
சிவகங்கையில் வறட்சியால் நிலத்தடி நீர்மட்டம் சரிவு
சிவகங்கையில் வறட்சியால் நிலத்தடி நீர்மட்டம் சரிவு
ADDED : மே 16, 2024 06:41 AM

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் இருந்து போதிய மழை பெய்யாததால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வறட்சி நிலவுகிறது. இப்பிரச்னையை தவிர்க்க காடுகள், மலை, ஆறுகளில் அதிகளவில் தடுப்பணைகளை கட்டி மழை நீரை சேகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு வைகை ஆறு மட்டுமே கை கொடுக்கிறது. மற்ற பகுதிகள் வானம் பார்த்த பூமியாக காட்சி அளிக்கின்றன. மழையை நம்பி தான் இங்கு விவசாயம் நடக்கிறது. கடந்த ஆண்டு சிவகங்கை மாவட்டத்திற்கு தேவையான மழை பெய்யவில்லை. அதன் தொடர்ச்சியாக தற்போதும் கோடை மழையின்றி கடும் வறட்சி நிலவுகிறது.
மாவட்ட அளவில் பெரும்பாலான கண்மாய்கள் வறண்டும், ஆறுகளில் நீர் ஓட்டமின்றி ஆங்காங்கே சிறு தடுப்பணைகளில் மட்டுமே தண்ணீர் தேங்கியுள்ளது. தற்போது சிவகங்கை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் சரிவை சந்தித்து வருகிறது.
சிவகங்கை, தேவகோட்டை, சருகணி போன்ற பகுதிகள் எளிதில் நிலத்தடி நீர் கிடைக்கும் பகுதியாக கண்டறிந்துள்ளனர். இப்பகுதியிலேயே இன்றைக்கு 100 அடிக்கு கீழ் தான் குடிநீர் கிடைக்கிறது. சிவகங்கையில் இருந்து பூவந்தி வழியாக மதுரை வரை பாறைப்பகுதியாக காணப்படுவதால், நிலத்தடி நீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
சிங்கம்புணரி, எஸ்.புதுார், திருப்புத்துார் போன்ற ஒன்றியங்கள் மலை சார்ந்த பகுதியாக இருப்பதால், அங்கு பாறைகள் நிறைந்து நீர் ஊற்று கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
நிலத்தடி நீர்மட்டம் 7 அடி குறையும்: குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி கூறியதாவது:
மாவட்ட அளவில் கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள் என 71 இடங்களில் ஆண்டிற்கு ஜனவரி, மே மாதங்களில் ஆய்வு செய்து நிலத்தடி நீர்மட்டத்தின் அளவை கணக்கிடுவோம். மே மாதத்திற்கான ஆய்வு விரைவில் துவக்கப்படும். கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நிலத்தடி நீர்மட்டம் சராசரியாக 7 அடி வரை குறைய வாய்ப்பு உண்டு.
நிலத்தடி நீர்மட்டம் பாதிக்காமல் இருக்க காடுகள், ஆறுகள், நீர் வரத்து கால்வாய்களில் அதிகஅளவில் தடுப்பணை கட்டி மழை நீரை கட்டாயம் சேகரிக்க வேண்டும். அப்போது தான் நிலத்தடி நீர்மட்ட அளவு குறையாமல் பாதுகாக்க முடியும்.