/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆடுகளுக்கு வாய்ப்புண் நோய் தாக்குதல்; மருந்து கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள்
/
ஆடுகளுக்கு வாய்ப்புண் நோய் தாக்குதல்; மருந்து கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள்
ஆடுகளுக்கு வாய்ப்புண் நோய் தாக்குதல்; மருந்து கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள்
ஆடுகளுக்கு வாய்ப்புண் நோய் தாக்குதல்; மருந்து கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள்
ADDED : செப் 01, 2024 06:37 AM
திருப்புவனம் : திருப்புவனம் வட்டாரத்தில் ஆடுகளுக்கு வாய்ப்புண் நோய்க்கு கால்நடை மருந்தகங்களில் மருந்து கிடைக்காததால் விவசாயிகள் தவிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் வட்டாரத்தில் அதிகளவு கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. விவசாயிகளுக்கு விவசாய காலங்கள் தவிர மற்ற காலங்களில் கால்நடை வளர்ப்பையும் உபதொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். திருப்புவனம் வட்டாரத்தில் அல்லிநகரம், நயினார்பேட்டை, கீழராங்கியன், வயல்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளாடு, செம்மறியாடுகள் அதிகம் வளர்க்கப்படுகின்றன.
செம்மறியாடுகளுக்கு பிறந்த எட்டு மாதங்களுக்கு பிறகு வாய்ப்புண் நோய் ஏற்படுகிறது.
வாய்ப்புண் நோய் ஏற்பட்டால் உணவு உண்ண முடியாமலும் தண்ணீர் அருந்த முடியாமலும் தவித்து உயிரிழப்பு ஏற்படும், வாய்ப்புண் நோய்க்கு அரசு கால்நடை மருந்தகங்களில் இலவசமாக வழங்கப்படும் மருந்தால் சில நாட்களில் வாய்ப்புண் நோய் சரியாகி உணவு உண்ண ஆரம்பித்து விடும்.
ஆனால் கால்நடை மருந்தகங்களில் வாய்ப்புண் நோய்க்கு மருந்து இல்லை என்று கூறுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
திருப்புவனம் வட்டாரத்தில் திருப்புவனம், அல்லிநகரம், கொந்தகை, பூவந்தி, திருப்பாச்சேத்தி உள்ளிட்ட இடங்களில் கால்நடை மருந்தகங்கள் உள்ளன.
இவற்றில் தினசரி மருந்து கேட்டு கால்நடை வளர்ப்போர் அலைந்து வருகின்றனர். தற்போது மழை காலம் தொடங்க உள்ள நிலையில் மருந்தின் தேவை அதிகரித்து வருகிறது.
மாவட்ட நிர்வாகம் அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் வாய்ப்புண் நோய்க்கு தட்டுப்பாடின்றி மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கால்நடை வளர்ப்போர் எதிர்பார்க்கின்றனர்.