/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வைகை கரையில் ஆக்கிரமிப்பு அகற்ற விவசாயிகள் கோரிக்கை
/
வைகை கரையில் ஆக்கிரமிப்பு அகற்ற விவசாயிகள் கோரிக்கை
வைகை கரையில் ஆக்கிரமிப்பு அகற்ற விவசாயிகள் கோரிக்கை
வைகை கரையில் ஆக்கிரமிப்பு அகற்ற விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஆக 31, 2024 06:19 AM

சிவகங்கை, : மானாமதுரை வைகை ஆற்றின் கரையில் கடைகள் கட்டி ஆக்கிரமித்துள்ளனர். இவற்றை அகற்ற வேண்டும் என சிவகங்கையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர்.
சிவகங்கையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடந்தது. அமைச்சர் பெரியகருப்பன், மாங்குடி எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, கோட்டாட்சியர்கள் விஜயகுமார், பால்துரை, வேளாண்மை இணை இயக்குனர் லட்சுமி பிரபா, கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத், மாவட்ட வழங்கல் அலுவலர் சபிதாள் பேகம் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
* வழக்கறிஞர் ராஜா, மணல் மேடு : தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளிடம் பிடித்த செய்த பங்கு தொகையை திரும்ப தர வேண்டும்.
* கன்னியப்பன், இளையான்குடி: விவசாய தேவைக்காக கிராவல் மண் எடுக்க 30 நாட்கள் அனுமதி சான்று பெற்றும், கிராவல் மண் எடுக்க அனுமதிப்பதில்லை.
* கலெக்டர்: கிராவல் மண் எடுக்க அனுமதி பெற்றிருந்தாலும், எத்தனை நடை, யூனிட் எடுக்க போகிறீர்கள் என்பதற்கான 'பெர்மிட்' பெற வேண்டும்.
* அய்யாச்சாமி, கீழ நெட்டூர்: மானாமதுரை வைகை ஆற்றின் கரையில் கடைகள் கட்டி ஆக்கிரமித்துள்ளனர். குறிப்பாக வாரச்சந்தை நாட்களில் காய்கறி கடைகள் வைத்து இடையூறு செய்கின்றனர்.
* பாரதிதாசன், செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை): வைகை ஆற்றின் கரையில் உள்ள ஆக்கிரமிப்பு அளவீடு செய்து, அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
* ஆதிமூலம், திருப்புவனம்: தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்குவதற்காக, சிறப்பு கடன் முகாம் நடத்த வேண்டும்.
* அமைச்சர் பெரியகருப்பன்: முகாம் நடத்தி பயிர் கடன் வழங்குவது சாத்தியமில்லை. கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர், நகை, மகளிர் குழு கடன் ரூ.19,500 கோடி வரை தள்ளுபடி செய்துள்ளோம். தொடர்ந்து வங்கிகளில் பயிர் கடன் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* கிருஷ்ண தேவர், மானாமதுரை: விவசாயிகள், மானாமதுரை பஸ் நிறுத்த பிரச்னை என பல மனுக்கள் குறைதீர் கூட்டத்தில் கொடுத்தும், தீர்வு காணப்படவில்லை. இதனால், எதற்கு விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு வர வேண்டும் என்ற அதிருப்தி ஏற்படுகிறது.
* கலெக்டர்: விவசாயிகள் தரும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். நிதி சார்ந்த பிரச்னைக்கு தான் அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளோம்.
* சந்திரன், சிவகங்கை: காரைக்குடி மக்களின் குடிநீர் ஆதாரமான சம்பை ஆர்டீசியன் ஊற்றில் கழிவு தேங்கி நீர்ஆதாரம் பாதிக்கப்படுகிறது.
* கலெக்டர்: இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஏற்கனவே ஆய்வு செய்து நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மீண்டும் சம்பை ஊற்று பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
* ராமலிங்கம், தமறாக்கி: பெரியாறு கால்வாய் தண்ணீர் முறைப்படி சிவகங்கை பகுதிக்கு செப்.,ல் கொண்டு வந்தால் தான், ஒரு போக நெல் சாகுபடி எடுக்க முடியும்.
* ஆதிமூலம், திருப்புவனம்: திருப்புவனம், கானுார் கண்மாய் போன்று அனைத்து கண்மாய்களிலும் வளர்ந்துள்ள சீமை கருவேல் மரங்களை அகற்ற வேண்டும். இதற்கு வனத்துறை அளவீடு செய்து தருவதில் காலதாமதம் செய்கின்றனர்.
* கலெக்டர்: வனத்துறையினர், சீமை கருவேல் மரங்களை அளவீடு செய்து தர வேண்டும். அப்போது தான் நீர்நிலைகளில் வளர்ந்துள்ள சீமைகருவேல் மரங்களை வெட்டி, நீரினை தேக்க முடியும்.
* வழக்கறிஞர் ராஜா, மணல்மேடு: திருப்புவனம் பேரூராட்சி நிர்வாகம், அருப்புக்கோட்டை கூட்டு குடிநீர் தொட்டி வளாகத்தில் மட்டுமே சந்தை நடத்த வேண்டும். ஆனால், தேசிய நெடுஞ்சாலையில் சந்தை அமைத்து, வாடகை வசூலிக்க பேரூராட்சி நிர்வாகம் டெண்டர் விட உள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும்.
* ஆபிரகாம், கல்லுவழி: கல்லுவழி விலக்கில் பள்ளி அருகே உள்ள பழைய பஸ் ஸ்டாப் கட்டடத்தை அகற்ற வேண்டும். பல முறை புகார் செய்தும், பழைய கட்டடத்தை அகற்றவில்லை. இவ்வாறு விவாதம் நடந்தது.