/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தழை சத்துக்காக தக்கை பூண்டு வளர்க்கும் விவசாயிகள்
/
தழை சத்துக்காக தக்கை பூண்டு வளர்க்கும் விவசாயிகள்
ADDED : ஆக 19, 2024 12:39 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் மண்ணில் தழைச்சத்தை பெருக்க விவசாயிகள் தக்கைப்பூண்டு சாகுபடி செய்துள்ளனர்.
சிங்கம்புணரி, எஸ்.புதுார் ஒன்றியங்களில் விவசாயிகள் பலர் இந்தாண்டு கோடை பயிர் சாகுபடி செய்யவில்லை. கடந்த ஆண்டுகளில் பல இடங்களில் ரசாயன உரங்களை போட்டு மண்ணின் வளம் மாறியதை தொடர்ந்து தக்கைப் பூண்டுகளை வளர்த்து வருகின்றனர்.
இச்செடிகளை பசுந்தாள் உரமாகவும் இயற்கைச் சத்துக்களாகவும் மாற்ற முடியும். வேளாண்மை துறையினர் மானிய விலையில் வழங்கிய விதைகளை வாங்கி வயல்களில் விதைத்து வளர்த்து வருகின்றனர்.
45 முதல் 70 நாட்களில் பூ பூத்தவுடன் இச்செடிகளை நிலத்திலேயே போட்டு உழுதுவிட்டால் அடுத்ததாக பயிரிடும் எந்த பயிருக்கும் ரசாயன உரம் தேவையில்லை. செலவுகளும் குறையும்.
மேலும் விளைநிலங்களுக்கு தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் சத்துக்கள் இந்த செடிகளில் இருந்து கிடைப்பதுடன் நிலத்தடி நீர் உவர்ப்பாக உள்ள பகுதியில் உவர்ப்பு தன்மையை குறைக்கவும் பயன்படுகிறது. அதேநேரம் குறிப்பிட்ட சில விவசாயிகளுக்கு மட்டுமே தக்கைப்பூண்டு விதைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் பலருக்கு கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.
எனவே வருங்காலங்களில் அனைத்து விவசாயிகளுக்கும் தக்கைப்பூண்டு விதைகளை பாரபட்சமின்றி வழங்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

