/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரூ.5,000 லஞ்சம் வாங்கிய தீயணைப்பு அதிகாரி கைது
/
ரூ.5,000 லஞ்சம் வாங்கிய தீயணைப்பு அதிகாரி கைது
ADDED : ஆக 22, 2024 02:22 AM

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த நாகராஜன், 55, சிவகங்கையில் மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலகத்தில், மாவட்ட துணை அலுவலராக பணிபுரிகிறார். இவரிடம் கோழிப்பண்ணை வைப்பதற்கு, தடையில்லா சான்று கேட்டு சூரக்குளத்தைச் சேர்ந்த கற்பகமூர்த்தி, 36, விண்ணப்பித்தார்.
நாகராஜன் சூரக்குளம் சென்று, கோழிப்பண்ணை அமைக்கும் இடத்தை ஆய்வு செய்தார். அப்போது, கற்பகமூர்த்தியிடம் லஞ்சமாக 1,000 ரூபாய் பெற்றார்.
அலுவலகத்திற்கு வந்து 5,000 ரூபாய் கொடுக்குமாறு கூறியதாகக் கூறப்படுகிறது. அவருடனான உரையாடலை கற்பகமூர்த்தி, அவருக்கு தெரியாமல் வீடியோ எடுத்தார்.
இதுகுறித்து, வீடியோ ஆதாரத்துடன், சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசில் கற்பகமூர்த்தி புகார் அளித்தார். போலீசார் அறிவுரையின்படி, ரசாயனம் தடவிய பணத்தை நேற்று காலை 10:00 மணிக்கு, சிவகங்கை தீயணைப்பு நிலையத்தில் நாகராஜனிடம் கொடுத்தார்.
மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நாகராஜனை கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார்: விழுப்புரம், சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு, 45, திருவெண்ணெய்நல்லுார் பகுதியில் புதிய மனைப்பிரிவு அமைத்து விற்பனை செய்கிறார். மனைப்பிரிவில் ஒரு சில மனைப்பிரிவுகளுக்கு பேரூராட்சி ஒப்புதல் கேட்டு, திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்தார்.
பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றும் முருகன், 51, என்பவர், சேட்டுவிடம் 3 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து விழுப்புரம், லஞ்சம் ஒழிப்பு அலுவலகத்தில் சேட்டு புகார் அளித்தார். போலீசார் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய 1.80 லட்சம் ரூபாயை நேற்று பேரூராட்சி அலுவலகத்தில் இருந்த முருகனிடம் சேட்டு கொடுத்தார்.
மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், முருகனை கைது செய்து விசாரிக்கின்றனர்.