/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அதிகரிக்கும் வெப்பத்தால் இறக்கும் மீன்கள்
/
அதிகரிக்கும் வெப்பத்தால் இறக்கும் மீன்கள்
ADDED : ஏப் 25, 2024 06:14 AM

திருப்புத்துார் : திருப்புத்துார் தெப்பக்குளமான சீதளி குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் துர் நாற்றம் வீசத்துவங்கியுள்ளது.
திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயில் தெப்பக்குளமான சீதளி குளத்தில் கடும் கோடை வெப்பத்திலும் ஓரளவு நீரே உள்ளது. சில படித்துறைகளில் மட்டும் மக்கள் குளிக்கவும், துவைக்கவும் பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக கொத்து, கொத்தாக மீன்கள் இறந்து கரையோரமாக ஒதுங்கி மிதக்கத் துவங்கியுள்ளன. வடகரை படித்துறையில் அதிகமாக காணப்படுகின்றன. இதனால் நாளுக்கு நாள் அதிகமான மீன்கள் அழுகி துர்நாற்றம் வீசத்துவங்கியுள்ளது. இதனால் குளத்தில் நீர் சுகாதாரக்கேடாகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
தொடரும் வெப்பத்தால் மேலும் அடுத்தடுத்துமீன்கள் இறக்க வாய்ப்புள்ளது. நீர் குறைவதுடன், அதிகமான கோடை வெப்பத்தால் நீரில் ஆக்ஸிஜன் குறைவால் மீன்கள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இறந்த மீன்களை அகற்றி குளத்து நீரை சுகாதாரம் காக்க பொதுமக்கள் கோரியுள்ளனர்.

