/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வைகை ஆற்றில் கொட்டப்படும் குப்பை
/
வைகை ஆற்றில் கொட்டப்படும் குப்பை
ADDED : மே 03, 2024 05:40 AM

திருப்புவனம்: திருப்புவனம் வைகை ஆற்றில் திருப்புவனம், லாடனேந்தல் உள்ளாட்சி அமைப்புகள் போட்டி போட்டுக் குப்பைகளை கொட்டி வருவதால் வைகை ஆறு மாசுபட்டு வருகிறது.
வைகை ஆற்றங்கரையில் திருப்புவனம், செல்லப்பனேந்தல், லாடனேந்தல் உள்ளிட்ட ஊர்கள் அமைந்துள்ளன . இப்பகுதியில் தினசரி உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சேகரிக்கப்படும் குப்பையை கொட்ட போதிய இடவசதி இல்லை.
குப்பையை தரம் பிரித்து அழிக்கவும் எந்த வித ஏற்பாடுகளும் இல்லை. தினசரி சேகரிக்கப்படும் கழிவுகள் அனைத்தையும் வைகை ஆற்றில் கொட்டி வருகின்றனர்.
இதனால் வைகை ஆறு மாசடைந்து வருவதுடன் ஆற்றில் தேங்கும் தண்ணீர் கருப்பு நிறத்தில் மாறி வருகிறது. வைகை ஆற்றில் இருந்து கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தொடர்ச்சியாக கொட்டப்படும் குப்பைகளால் நிலத்தடி நீரும் மாசடைந்து வருகிறது. லாடனேந்தல் வைகை ஆற்றின் பின்புறம் மாரநாடு தடுப்பணை கடந்த பத்தாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தடுப்பணையின் இருபுறமும் வைகை ஆற்றினுள் மணல் கொண்டு கரை அமைக்கப்பட்டது.
ஆற்றினுள் கரை அமைக்கப்பட்டதால் கரைக்கும் ஆற்றிற்கும் இடையில் 15 அடி முதல் 30 அடி அகலம் வரை 500 மீட்டர் தூரத்திற்கு பள்ளம் உள்ளது. இதில் லாடனேந்தல், திருப்புவனம் உள்ளாட்சி அமைப்புகளில் சேகரிக்கப்படும் அனைத்து கழிவுகளையும் கொட்டி வைகை ஆற்றை குப்பை கிடங்காக மாற்றி விட்டனர். தொடர்ச்சியாக கொட்டப்பட்ட குப்பைகளால் இந்த பள்ளம் நிரம்பி விட்டது.
கோழி கழிவு, இறைச்சி கழிவு உள்ளிட்ட அனைத்தும் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசி இப்பகுதியில் நடமாடவே முடியவில்லை.
மழை காலங்களில் இறைச்சி கழிவு மென்மேலும் அழுகி அதில் இருந்து புழுக்கள் உருவாகி சுகாதார கேட்டை எற்படுத்துகின்றன. தடுப்பணை செல்லும் வழி முழுவதும் குப்பை கொட்டப்படுவதால் விவசாயிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடுப்பணைக்கு செல்லவே முடியவில்லை.
இதுகுறித்து பொதுப்பணித்துறையும் கண்டு கொள்ளாமல் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் குப்பை கொட்ட தடை விதித்து, ஏற்கனவே கொட்டப்பட்ட குப்பையை அகற்ற முன்வரவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.