ADDED : ஏப் 04, 2024 04:15 AM
மானாமதுரை : மானாமதுரை அருகே கல்குறிச்சியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் சிவகங்கை காங்., வேட்பாளர் கார்த்தியை ஆதரித்து பேசியதாவது:
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., ஆட்சி கடந்த மூன்று ஆண்டுகளில் மக்களுக்கு என்ன செய்தது என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.
1.15 கோடி மகளிருக்கு மாதந்தோறும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் டவுன் பஸ்களில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் திட்டம் போன்ற பல திட்டங்களை தி.மு.க., அரசு செயல்படுத்தி வருகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக மிகவும் பிடித்த சிறப்பான திட்டம் காலை உணவு திட்டம்.
தமிழகத்தில் துவங்கப்பட்ட இத்திட்டம் வெகு விரைவில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் நிலை உள்ளது. இதன் மூலம் மிகப்பெரிய புகழ் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கிடைக்கப் போகிறது. இதுபோன்று பல திட்டங்களை செய்துள்ளார்கள், இனிமேலும் செய்வார்கள். ஆகவே இதனை அவர்கள் தொடர்ந்து செய்வதற்கு தொல்லையில்லாத சூழ்நிலை வேண்டும், தொல்லை கொடுப்பவர்கள் டெல்லியில் இருக்கிறார்கள். தமிழகத்தில் பாஜ., வேரூன்றவில்லை, காலுான்றவில்லை முயற்சி செய்து வருகிறது.
டில்லியில் உள்ள அரசு தொல்லை தராமல் இருக்க வேண்டுமென்றால் இண்டியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றார்.

