/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தும்பிக்கையை அசைத்தவாறு உயிரிழந்த குன்றக்குடி யானை மனதை பிசையும் தகவல்
/
தும்பிக்கையை அசைத்தவாறு உயிரிழந்த குன்றக்குடி யானை மனதை பிசையும் தகவல்
தும்பிக்கையை அசைத்தவாறு உயிரிழந்த குன்றக்குடி யானை மனதை பிசையும் தகவல்
தும்பிக்கையை அசைத்தவாறு உயிரிழந்த குன்றக்குடி யானை மனதை பிசையும் தகவல்
ADDED : செப் 17, 2024 12:13 AM

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயில் யானை சுப்புலட்சுமி 53, பாகனை பார்த்து தும்பிக்கையை அசைத்தவாறு உயிரிழந்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலுக்கு ஆத்தங்குடியை சேர்ந்த உபயதாரர் 1971 ம் ஆண்டில் பெண் யானை சுப்புலட்சுமியை வழங்கினார். யானையை பாதுகாக்க மலைக்கோயில் நுழைவு வாயில் அருகே தகரத்தால் ஆன கூரை போட்டிருந்தனர். இந்த தகர கூரையினால், யானைக்கு வெப்பம் தாக்காமல் இருக்க, கூரைக்கு மேலே தென்னை மர தட்டிகளை அமைக்காமல் கூரையின் உள்ளே அமைத்து விட்டனர்.
யானையை பராமரிக்க பாகன், உதவியாளர் இருவர் பணிபுரிகின்றனர். செப்., 11 இரவு யானையை தகர கூரைக்குள் வைத்து, இரண்டு காலிலும் சங்கிலியால் கட்டி வைத்து விட்டு, பாகன் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இரவு தென்னந் தட்டியில் தீப்பற்றி, யானையின் உடலின் மேற்பகுதி, தந்தம் தீயில் கருகின. அதில் இருந்து தப்பிக்க முடியாமல், ஒரு காலில் இருந்த சங்கிலியை மட்டுமே யானையால் உடைக்க முடிந்தது. அன்றைய தினம் யானை பாகன் இருந்திருந்தால், யானையின் சத்தம் கேட்டு, சங்கிலியை கழட்டி விட்டு காப்பாற்றி இருக்கலாம்.
யானைக்கு சிகிச்சை அளிக்க கால்நடை பல்கலையில் இருந்து 4 மூத்த டாக்டர்கள் தலைமையில் குழுவினர் வந்திருந்தனர். 72 மணி நேரத்திற்கு பின்பு தான் எதுவும் சொல்ல முடியும் என அவர்கள் தெரிவித்தனர். ஆனால், 13 அன்று அதிகாலை 2:00 மணிக்கு, நிற்க முடியாமல் கீழே விழுந்த யானை தும்பிக்கையால், பாகனை பார்த்து அசைத்தவாறே உயிரிழந்துள்ளது.
ஹிந்து அறநிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த மாதம் தான் யானைக்கு மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர். உடல் ரீதியாக அதற்கு எந்த பிரச்னையும் இல்லை. யானையின் பிரேத பரிசோதனை, போலீசாரின் விசாரணை அறிக்கைக்கு பின்னர் தான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும். தமிழக அளவில் வேறு எங்கும் இது போன்று கொடூர தீ விபத்தில் கோயில் யானை இறந்தது இல்லை. கோயில் யானைகளை காக்க அரசு கட்டாயம் ஒரு நல்ல முடிவினை எடுக்கும் என்றார்.