/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பூவந்தியில் பாகற்காய் விளைச்சல் அதிகரிப்பு
/
பூவந்தியில் பாகற்காய் விளைச்சல் அதிகரிப்பு
ADDED : ஏப் 25, 2024 06:09 AM

பூவந்தி : பூவந்தி வட்டாரத்தில் கோடையிலும் விவசாயிகளுக்கு கை கொடுக்கும் பாகற்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது.
பூவந்தி, ஏனாதி, ஆவரங்காடு, மாரநாடு உள்ளிட்ட கிராம கண்மாய் கரை, கரையை ஒட்டிய பகுதி, உட்புறம் என புறம்போக்கு இடங்களில் விவசாயிகள் பலரும் கோடை காலத்தில் பாகற்காய் பயிரிடுவது வழக்கம்.
செலவில்லாத விவசாயம், தண்ணீர் அதிகமாக தேவைப்படாது, நோய் தாக்குதல் இல்லை, தினசரிவருவாய் என்பதால் விவசாயிகள் பலரும் ஆர்வமுடன் கண்மாய் பகுதிகளில் இடம் பிரித்து பாகற்காய் பயிரிட்டுள்ளனர்.
விவசாயிகள் ஜனவரி கடைசியில் நெல் அறுவடை முடிந்த பின் பாகற்காய் பயிரிட தொடங்குகின்றனர். கண்மாயின் உட்புறம், கரைப்பகுதிகளில் ஈரப்பதம் அதிகம் இருக்கும், இதில் பாகற்காய் பயிரிடுகின்றனர். வெயில் அதிகரிக்க அதிகரிக்க விளைச்சலும் அதிகரிக்கும், விவசாயிகள் பலரும் குடம், பானை உள்ளிட்டவற்றில் தண்ணீர் கொண்டு வந்த பாகற்காய் செடிகளின் மீது தெளித்து வளர்க்கின்றனர்.
பயிரிட்ட இரு மாதங்கள்கழித்து சுழற்சிமுறையில் தினசரி பாகற்காய் பறிக்கப்பட்டு சிவகங்கை, மதுரை, மேலுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
மிதி பாகற்காய், கொடி பாகற்காய் என இரண்டு ரகங்கள் இருந்தாலும் செலவில்லாத விவசாயம் மிதி பாகற்காய் தான். செலவு குறைவு தினசரி ஒரு மூடை பறித்தாலும் போதும் நல்ல லாபம் கிடைக்கும்.
விவசாயிகள் கூறுகையில், கொடி பாகற்காய், மிதி பாகற்காய் என இரண்டு வகை இருந்தாலும் இப்பகுதியில் 100 ஏக்கருக்கு மேலாக மிதி பாகற்காய் பயிரிடப்படுகிறது.
கடந்தாண்டு தினசரி பத்து கிலோ வரை பறித்து விற்பனை செய்து வந்தோம், இந்தாண்டு கண்மாயில் வெகு சீக்கிரமே தண்ணீர் வற்றியதால் முன்கூட்டியே பாகற்காய் பயிரிட்டோம், ஏக்கருக்கு அதிகபட்சமாக விதை, பாத்தி கட்ட என இரண்டாயிரம் ரூபாய் முதல் மூவாயிரம் ரூபாய் வரை செலவாகும், அதிக மழை தேவை இல்லை.
லேசான மழை பெய்தால் கூட பாகற்காய் நல்ல விளைச்சல் கண்டு விடும், ஒரு படி பாகற்காய் 120 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம், பெரும்பாலும் மதுரை வியாபாரிகள் வயலுக்கே வந்து வாங்கி செல்கின்றனர். அதிகாலை ஐந்து மணி முதல் ஏழு மணி வரை பாகற்காய் பறிப்போம் நபர் ஒன்றுக்கு அதிகபட்சமாக பத்து படி வரை பறிக்கலாம், என்றனர்.

