/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இரை தேடி இருப்பிடம் வந்த புலிக்குளம் மாடுகள்; மானாமதுரையில் கிடை அமைக்க விவசாயிகள்
/
இரை தேடி இருப்பிடம் வந்த புலிக்குளம் மாடுகள்; மானாமதுரையில் கிடை அமைக்க விவசாயிகள்
இரை தேடி இருப்பிடம் வந்த புலிக்குளம் மாடுகள்; மானாமதுரையில் கிடை அமைக்க விவசாயிகள்
இரை தேடி இருப்பிடம் வந்த புலிக்குளம் மாடுகள்; மானாமதுரையில் கிடை அமைக்க விவசாயிகள்
ADDED : ஆக 27, 2024 06:10 AM

மானாமதுரை அருகே உள்ள புலிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த நாட்டு மாடுகள் இயற்கையிலேயே வறட்சியை தாங்கி வளரக்கூடிய மாட்டினங்களில் ஒன்று. இந்த வகை மாடுகள் தமிழகம் முழுவதும் கிடை மாடுகளாக வளர்க்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக சிவகங்கை, விருதுநகர், மாவட்டங்களில் அதிகம் வளர்க்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த இன மாடுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதை தொடர்ந்து எண்ணிக்கையை பெருக்கும் வகையில் மானாமதுரையில் புலிக்குளம் நாட்டின மாடுகளின் ஆராய்ச்சி நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதிலும் நடைபெறும் ஜல்லிக்கட்டிற்கு இந்த மாடுகளின் கன்றுகளையே பழக்கப்படுத்தி ஜல்லிக்கட்டு காளைகளாக வளர்த்து வருகின்றனர்.இந்த மாடுகளின் சிறுநீர் மற்றும் சாணம் இயற்கை உரமாக பயன்படுவதால் இந்த மாடுகளை கிடை அமைக்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
புலிக்குளம் நாட்டு இன மாடுகளுக்கு இப்பகுதிகளில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வெயில் காலங்களில் இரை மற்றும் போதுமான மேய்ச்சல் இல்லாத காரணத்தினால் மாடுகளை வளர்ப்பவர்கள் பசுமையான மாவட்டங்களுக்கு கால்நடையாகவே அழைத்துச் சென்று அப்பகுதிகளில் கிடை அமைத்து வந்தனர்.
தற்போது கடந்த ஒரு மாதமாக மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்ததை தொடர்ந்து மாடுகளை தற்போது மானாமதுரைக்கு மேய்ச்சலுக்காக அழைத்து வந்துள்ளனர்.
புலிக்குளம் நாட்டினமாடுகளின் உரிமையாளர்கள் கூறியதாவது:
புலிக்குளம் நாட்டின மாடுகள் கூட்டம், கூட்டமாக கிடை மாடுகளாகவே வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த மாடுகளின் சாணம் மற்றும் சிறுநீர் இயற்கையான உரமாக இருப்பதால் இம்மாடுகளை கிடையமைக்க தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தற்போது இப்பகுதியில் பெய்த மழையால் மாடுகளுக்கு தேவையான மேய்ச்சல் நிலம் இருப்பதால் இங்கு அழைத்து வந்துள்ளோம். 400க்கும் மேற்பட்ட மாடுகளை வயல்களில் ஒரு நாள் கிடை அமைப்பதற்கு ரூ.2ஆயிரத்திலிருந்து ரூ.2500 வரை பெற்று வருகிறோம்.
தற்போது விவசாயிகள் வயல்களை உழுது விவசாயத்திற்கு தயார் நிலையில் வைத்து மாடுகளை கிடை அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றனர்.

