/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் குழாய் பதிப்பதில் மெத்தனம் வீணாக ரோட்டில் ஓடும் குடிநீர்
/
திருப்புவனத்தில் குழாய் பதிப்பதில் மெத்தனம் வீணாக ரோட்டில் ஓடும் குடிநீர்
திருப்புவனத்தில் குழாய் பதிப்பதில் மெத்தனம் வீணாக ரோட்டில் ஓடும் குடிநீர்
திருப்புவனத்தில் குழாய் பதிப்பதில் மெத்தனம் வீணாக ரோட்டில் ஓடும் குடிநீர்
ADDED : மார் 03, 2025 07:16 AM

திருப்புவனம் : திருப்புவனத்தில் உரிய திட்டமிடல் இன்றி குழாய் பதிப்பு பணிகள் நடந்ததால் தினசரி குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
திருப்புவனத்தில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.16 கோடியில் 18 வார்டுகளில் குடிநீர் குழாய் புதிதாக பதிக்கும் பணி கடந்த பல மாதங்களாக நடந்து வருகிறது. திருப்புவனம் பாக்யாநகர் மற்றும் புதூர் வைகை ஆற்றில் இரண்டு இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, ஐந்து இடங்களில் இரண்டு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட உள்ளது.
பல இடங்களில் உரிய திட்டமிடல் இன்றி குழாய்கள் ஏனோ தானோ என பதிக்கப்பட்டுள்ளது. பெரிய சைஸ் குழாய்களில் தண்ணீர் அனுப்பும் போது அழுத்தம் அதிகமாக இருக்கும். சில இடங்களில் காற்று வெற்றிடத்தை நிரப்பும், அதற்கு ஏற்றவாறு காற்று வெளியேற குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரு முறை கேட்வால்வு எனப்படும் காற்று வெளியேற்றும் அமைப்பு அமைக்கப்பட வேண்டும், ஆனால் அதுபோன்ற எந்த அமைப்பும் ஏற்படுத்தப்படாமல் நகர்ப்பகுதியில் 46 கி.மீ., தூரத்திற்கு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.
காற்று வெளியேற்றும் அமைப்பு இல்லாததால் அதிக அழுத்தம் காரணமாக பல இடங்களில் குழாய்கள் சேதமடைந்து தற்போது சோதனை ரீதியாக தண்ணீர் செலுத்தும் போதே வெளியேறி வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே மீண்டும் குழாய்கள் உடைந்து தண்ணீர் ஆறாக ஓடியது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது, காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகிக்க குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. காவிரி தண்ணீர் வராத நாட்களில் வைகை ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைத்து அங்கிருந்து தொட்டிகளுக்கு தண்ணீர் நிரப்பவும் ஏற்பாடு செய்துள்ளோம். அதிக அழுத்தம் காரணமாக குழாய்கள் சேதமடைவது வழக்கம். இது போன்ற இடங்களை கண்டறிந்து அங்கு கேட்வால்வு அமைக்க உள்ளோம், என்றனர்.