ADDED : மார் 13, 2025 05:04 AM

திருப்புவனம்:' திருப்புவனத்தில் நேற்று காதணி விழா சீர் வரிசை கொண்டு செல்லும் போது பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தவரை எஸ்.ஐ., சிவப்பிரகாஷ் கைது செய்தார்.
திருப்பாச்சேத்தி அருகே ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் அஜய்தேவா 24, கச்சநத்தம் கொலை வழக்கு, திருப்பூரில் பட்டப்பகலில் மானாமதுரையைச் சேர்ந்தவர் கொலை செய்யப்பட்ட வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டவர்.
இவர் நேற்று திருப்புவனத்தில் உறவினர் வீட்டு காதணி விழா சீர்வரிசைஊர்வலத்தில் செல்வதாக வந்த தகவலையடுத்து எஸ்.ஐ., சிவப்பிரகாஷ் போலீசாருடன் சென்று பிடித்து வேனில் ஏற்ற முயற்சித்துள்ளார்.
உடன் வந்த உறவினர்கள் கைது செய்ய விடாமல் எஸ்.ஐ.,யுடன் தகராறில் ஈடுபட்டு மறித்துள்ளனர்.
இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு உறவினர்களை விலக்கி விட்டு அவரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.
போலீசார் கூறுகையில், அஜய்தேவா மீது நான்கு கொலை வழக்குகள், டாஸ்மாக் கடை கொள்ளை, செயின் பறிப்பு உள்ளிட்ட வழக்குகளில் தேடி வந்தோம், திண்டுக்கல்லில் நடந்த செயின் பறிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கிலும் தேடி வந்த நிலையில் காதணி விழா ஊர்வலத்தில் செல்வதாக வந்த தகவலையடுத்து அவரை கைது செய்து திண்டுக்கல் போலீசாரிடம்ஒப்படைத்துள்ளோம், என்றனர்.