/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தலைமையாசிரியர்களுக்கு கூட்டம்: பணியில் தொய்வா
/
தலைமையாசிரியர்களுக்கு கூட்டம்: பணியில் தொய்வா
ADDED : செப் 03, 2024 05:08 AM
காரைக்குடி : சிவகங்கை மாவட்டத்தில், உயர்நிலை மற்றும் மேநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வாரந்தோறும் மாவட்ட தலைநகரில் சந்திப்பு கூட்டம் நடப்பதால் பணிகளில் சுணக்கம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் குறைதீர் கூட்டங்கள் நடந்து வருகிறது. இதில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
அதேபோல் முதன்மை கல்வி அலுவலர் தலைமையில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் சிவகங்கையில் வாரந்தோறும் நடைபெறுகிறது.
தலைமையாசிரியர் பள்ளி நிர்வாகம், கற்பித்தலை சரிபார்த்தல், வருகைப் பதிவு கண்காணிப்பு, எமிஸ் தொடர்பான பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.
பள்ளியில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்வுக்கும் தலைமை ஆசிரியரே முதல் பொறுப்பாகிறார். இதனால் தலைமை ஆசிரியர் பணி என்பது அவசியமானதாகும்.
பொதுவாக சனி மற்றும் ஞாயிறு பள்ளி விடுமுறைக்கு பிறகு வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை முக்கிய பணி நாளாக கருதப்படுகிறது.
இந்நாளில் வாரம் முழுவதும் பள்ளி வேலைகளுக்கான பணிகள் திட்டமிடப்படுகிறது. ஆனால் வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை சிவகங்கையில் தலைமை ஆசிரியர்களுக்கு கூட்டம் நடைபெறுகிறது.
இதனால் பணிகளை தலைமை ஆசிரியர்கள் கவனிக்க முடியாத சூழல் நிலவுவதோடு, பள்ளி பணிகளிலும் பாதிப்பு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 500 தலைமையாசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.
இக்காலிபணியிடங்களில், பொறுப்பு தலைமையாசிரியர்கள் பணி செய்து வருகின்றனர். இவர்களுக்கும் இதே கூட்டம் நடைபெறுவதால் கற்பித்தல் பணியில் சிக்கல் நிலவுகிறது.
இதனால் மாணவர்களின் படிப்பும் எதிர்காலமும் கேள்விக்குறியாகி வருகிறது. இதனை தவிர்க்க, மாதத்திற்கு ஓரிருமுறை மட்டும் தலைமை ஆசிரியர்களுக்கு கூட்டம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.