/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடி மாநகராட்சியில் லஞ்சத்தில் திளைக்கும் அதிகாரிகள்
/
காரைக்குடி மாநகராட்சியில் லஞ்சத்தில் திளைக்கும் அதிகாரிகள்
காரைக்குடி மாநகராட்சியில் லஞ்சத்தில் திளைக்கும் அதிகாரிகள்
காரைக்குடி மாநகராட்சியில் லஞ்சத்தில் திளைக்கும் அதிகாரிகள்
ADDED : பிப் 27, 2025 01:09 AM

காரைக்குடி; காரைக்குடி மாநகராட்சியில் நடந்த கூட்டத்தில் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பெயருடன் கவுன்சிலர் புகார் அளித்தார். அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை என மேயர் குமுறலை வெளிப்படுத்தினார்.
காரைக்குடி மாநகராட்சி கூட்டத்திற்கு மேயர் முத்துத்துரை தலைமை ஏற்றார். கமிஷனர் சித்ரா, துணை மேயர் குணசேகரன் முன்னிலை வகித்தனர்.
4 வார்டு கவுன்சிலர் தெய்வானை தி.மு.க.,: எனது வார்டில் ஒரு பணி செய்து தரக் கோரிக்கை விடுத்தேன். கடந்த கூட்டத்தில் செய்து தருவதாக தெரிவித்ததோடு சரி இதுவரை நடைபெறவில்லை. மேயர் இப்போது வார்டுகளுக்கு விசிட் வருவதே இல்லை.
வரவிற்கு மிஞ்சிய செலவு
மேயர் முத்துத்துரை தி.மு.க.,: வார்டுகளுக்கு விசிட் வந்தால் கவுன்சிலர்கள் பல்வேறு குறைகளை தெரிவிக்கின்றனர். அந்த குறைகளை மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தால் அவர்கள் ஒத்துழைப்பதில்லை. 36 வார்டுக்கும் பகிர்ந்து தேவையான பணி செய்யப்படும். தற்போது மாநகராட்சி அதிகாரிகள் 15 வார்டுக்கு மட்டும் பணி ஒதுக்கி உள்ளனர். கேட்டால் நிதி பற்றாக்குறை என்கின்றனர். நிதி பற்றாக்குறை என்றால் உரிய கணக்கும் தருவதில்லை. அதிகாரிகள் வரவை விட செலவு அதிகம் காட்டுகின்றனர்.
எப்படி செலவு செய்கின்றனர், கடன் வாங்குகிறார்களா என்றும் தெரியவில்லை. ஒரு நாளைக்கு ரூ.18 முதல் 20 லட்சம் வருமானம் வருகிறது. இதில் 50 சதவீதம் கொடுத்தால் பணிகளை செய்து கொள்ளலாம். எந்த பணிகளும் நடைபெறுவதில்லை. மிக மோசமாக உள்ளது. காரைக்குடி மாநகராட்சியில் வரிகள் முறையாக வருகிறது. திட்டமிட்டு அதிகாரிகள் செயல்படுவதில்லை. அரசுக்கு அவப்பெயர் வரும் வகையில் காரைக்குடி மாநகராட்சி தற்போது செயல்படுகிறது.
கவுன்சிலரிடமே லஞ்சம்
11வது வார்டு கவுன்சிலர் மெய்யர் சுயேச்சை: எனது வார்டுக்குட்பட்ட வெங்கடேசன் தெருவில் பாதாள சாக்கடையை காரணம் காட்டி 4 ஆண்டுகளாக சாலை அமைக்கப்படவில்லை. ஒரு வீட்டுக்கு ரூ. 25 ஆயிரம் வரை வரி கட்டுகின்றனர். கிராமத்தில் கூட சாலைகள் தரமாக உள்ளது. காரைக்குடி மாநகராட்சியில் லஞ்சம் தலை விரித்தாடுகிறது. செஞ்சையில், உள்ள வீட்டிற்கு வரி விதிப்பதற்கு என்னிடமே லஞ்சம் கேட்கின்றனர். கவுன்சிலரிடமே லஞ்சம் கேட்டால் மக்களின் நிலை என்ன. இடங்களை அளப்பதற்கு லஞ்சம். மாநகராட்சி வருவாய் நிர்வாகம் மேயர் மற்றும் ஆணையாளர் கட்டுப்பாட்டில் இல்லை.
நிதி ஒதுக்கீடு இருந்தும் கருத்தடை இல்லை
27 வார்டு கவுன்சிலர் பிரகாஷ் அ.தி.மு.க.,: 3 ஆண்டுகளாக புகார் அளித்தும் எனது வார்டில் சாலைகள் அமைக்கப்படவில்லை.ஆணையாளரை சந்திக்கவே முடிவதில்லை. நீண்ட நேரம் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது. அதிகாரிகள் எந்த வார்டுக்கும் செல்வதில்லை. மாநகராட்சி அதிகாரிகளை வேலை செய்ய வைப்பதற்கு, கலெக்டரிடம் புகார் அளிக்க வேண்டிய நிலை உள்ளது. நாய்களுக்கு கருத்தடை செய்ய ரூ. 4 லட்சம் ஒதுக்கியும் எந்த நடவடிக்கையும் இல்லை.
ஆட்சிக்கு அவப்பெயர்
துணைமேயர் குணசேகரன்,தி.மு.க.,: மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள ஊராட்சிகளில், காரைக்குடி மாநகராட்சி என்று கற்கள் ஊன்றி மாநகராட்சியை பாதுகாக்க வேண்டும். அதிகாரிகளையும் கவுன்சிலர்களையும் புகார் சொல்லக்கூடாது. அனைவரும் ஒத்துழைத்து பணிகளை செய்ய வேண்டும். அ.தி.மு.க.,வினர் கூறுவதற்காக நாம் தி.மு.க., அரசின் பெயரைக் கெடுக்கக் கூடாது. பார்வையாளர்கள் நேரத்தில் தான் சென்று அதிகாரிகளை பார்க்க வேண்டும்.
அதிகாரிகள் மீது நடவடிக்கை
கமிஷனர் சித்ரா கூறுகையில்: லஞ்சம் பெற்றதாக நிரூபிக்கப்பட்டால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 3 ஆண்டுகளாக நிதி திட்டமிட்டு செலவு செய்யப்படவில்லை. கவுன்சிலர்களை திருப்தி படுத்த பணி வழங்கப்பட்டுள்ளது. ரூ. 11 கோடி பட்ஜெட் வழங்கப்பட்ட நிலையில் ரூ. 39 கோடிக்கு பணிகள் நடந்துள்ளது. குறை கூறிய கவுன்சிலர்களின் வார்டுகளில் தான் அதிகமான பணி நடந்துள்ளது.
கான்ட்ராக்டர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.9 கோடி வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. ரூ.1 கோடி மதிப்பீட்டிலான பணிகள் நிதிச் சுமை காரணமாக தொடங்கப்படாமல் உள்ளது. பலர் நிலுவைத் தொகை வழங்கினால் தான் பணி செய்வோம் என்று தெரிவிக்கின்றனர். இதுவரை ரூ. 39 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்துள்ளது. தற்போது நிதிச்சுமை காரணமாக டெண்டர் விடுவதே சிக்கலாக உள்ளது.
இதுவரை 74 சதவீதம் வரி வசூல் செய்து விட்டோம். மாநகராட்சி ஊழியர்கள் சம்பளம், மின்சார கட்டணம், எரிபொருள் உட்பட பல்வேறு செலவினங்களுக்கு என மாதம் ரூ. 4 கோடி வரை தேவைப்படும். இதுவரை திட்ட பணிகளுக்கு மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. செலவினம் முறையாக செய்யவில்லை.
மின்கட்டணம் மட்டுமே ரூ.1.70 கோடி வரை கட்ட வேண்டியுள்ளது. வைப்பு நிதி மட்டுமே ரூ. 1.50 கோடி நிலுவையில் உள்ளது. இதுபோன்று பல செலவினங்கள் ரூ.5 கோடி வரை கட்ட வேண்டிய நிலுவை தொகை உள்ளது. இதனால் புதிய திட்டப் பணிகளை செயல்படுத்துவதே சிரமமாக உள்ளது.