
சிங்கம்புணரி:சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே காவிரி குடிநீர் விநியோக அறையில் அமர்ந்து மது அருந்த வந்தவர்களை தடுத்து நிறுத்திய ஆப்பரேட்டர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
சிங்கம்புணரி அருகே எஸ்.புதுார் ஒன்றியம் முசுண்டபட்டியைச் சேர்ந்த பாண்டியன் மகன் தங்கராஜ் 56. அப்பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட ஆப்பரேட்டராக பணிபுரிந்தார். நேற்று மாலை முசுண்டபட்டியில் காவிரி குடிநீர் மோட்டார் அறையில் பணியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியை சேர்ந்த 2 பேர் அறையில் அமர்ந்து மது அருந்த வந்தனர். இங்கு அமர்ந்து மது அருந்தக் கூடாது என அவர்களை தங்கராஜ் விரட்டினார். ஆத்திரமடைந்த அந்த நபர்கள் தங்கராஜை வெளியே விரட்டி மது பாட்டிலால் கழுத்து உள்ளிட்ட இடங்களில் குத்தி கொலை செய்தனர். புழுதிபட்டி போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர். தங்கராஜுக்கு மனைவி, இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

