/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரேஷன் கடைக்கு ‛கருவிழி பதிவு கருவி
/
ரேஷன் கடைக்கு ‛கருவிழி பதிவு கருவி
ADDED : மே 08, 2024 06:08 AM

சிவகங்கை : சிவகங்கை, மானாமதுரை ரேஷன் கடைகளுக்கு வழங்க, நவீன கருவிழி பதிவு கருவி வந்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 125 தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் பாம்கோ, டி.என்.சி.எஸ்.சி., மூலம் ரேஷன் கடைகள் செயல்படுகிறது. இங்குள்ள ரேஷன் கார்டுதாரர்களில் குடும்ப தலைவரின் கைரேகையை பதிவு செய்து, அதன்மூலம் அரிசி, துவரம் பருப்பு, கோதுமை, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
பெரும்பாலான ரேஷன் கடைகளில் உள்ள கைரேகை இயந்திரத்தில் குடும்ப தலைவரின் கைரேகை சரியாக பதிவாகாததால் விற்பனையாளர்கள் பொருட்கள் வழங்க மறுக்கின்றனர்.
இதனால், அந்தந்த வட்ட வழங்கல் அலுவலரிடம் உரிய ஆதாரத்தை காண்பித்து, எழுதி வாங்கி வரும் குடும்ப தலைவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கி வந்தனர். இருப்பினும் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண கைரேகை பதிவு பெற முடியாத ரேஷன் கார்டு குடும்ப தலைவரின் கருவிழிகளை பதிவு செய்து, அதன் மூலம் ரேஷன் பொருட்கள் வழங்க முடிவு செய்தனர்.
சிவகங்கை, மானாமதுரைக்கு இயந்திரம்
முதல்கட்டமாக கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை சிவகங்கை, மானாமதுரை தாலுகாவில் செயல்படுத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக கருவிழி பதிவு செய்யும் கருவிகள் சில ரேஷன் கடைகளுக்கு வழங்கப்பட்டன. படிப்படியாக இவ்விரு தாலுகாவில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் கருவிழி பதிவு நவீன இயந்திரத்தை வழங்க முடிவு செய்துள்ளனர். இவ்விரு தாலுகாவிற்கு தேவையான கருவிழி பதிவு இயந்திரம் வந்துள்ளது. இந்த இயந்திரங்கள் சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் நேற்று இறக்கி வைக்கப்பட்டன.
மாவட்ட வழங்கல் அலுவலர் சுபைதாள் பேகம் கூறியதாவது: நவீன கருவிழி பதிவு கருவி சிவகங்கைக்கு வந்துள்ளது. அவற்றை ரேஷன் கடைகளுக்கு வழங்கி, கைரேகை பதிவு செய்யாத குடும்ப தலைவர்களின் கருவிழியை பதிவு செய்து அதன்படி ரேஷன் பொருட்கள் வழங்குமாறு அறிவுறுத்தி வருகிறோம்.

