/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை, உருவாட்டியில் பங்குனி விழா தேரோட்டம்
/
சிவகங்கை, உருவாட்டியில் பங்குனி விழா தேரோட்டம்
ADDED : மார் 23, 2024 11:51 PM

சிவகங்கை : சிவகங்கை தேவஸ்தானத்திற்குட்பட்ட சுப்பிரமணியர் கோயில், உருவாட்டி பெரியநாயகி அம்மன் கோயில்களில் பங்குனி திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது.
உருவாட்டி கோயில் தேரோட்டம்: காளையார்கோவில் அருகே உருவாட்டி பெரியநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழா மார்ச் 15 அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார். நேற்று அதிகாலை 4:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் பெரியநாயகி அம்மன் எழுந்தருளினார்.
நேற்று காலை 6:15 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது.
தேர் நான்கு ரத வீதிகளை சுற்றிவந்து நிலையை அடைந்தது.
இன்று இரவு 9:45 மணிக்கு பூப்பல்லக்கில் அம்மன் எழுந்தருள்வார். கண்காணிப்பாளர் பாலசரவணன், ஸ்தானிகர் அய்யப்பன் குருக்கள் விழா ஏற்பாட்டை செய்தனர்.
சுப்பிரமணியர் தேரோட்டம்: சிவகங்கை காசி விஸ்வநாதர் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் பங்குனி திருவிழா மார்ச் 15 அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் வள்ளி தெய்வானையுடன் முருகன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார்.
விழாவின் 9ம் நாளான நேற்று மாலை அலங்கரிக்கப்பட்ட தேரில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் ராஜஅலங்காரத்தில் எழுந்தருளினார்.
முன்பாக விநாயகர் சப்பரத்தில் எழுந்தருளினார். கொட்டக்குடி கிராமத்தார் கொடியை சுமந்து வந்து, தேருக்கு அளித்தனர்.
அனைத்து தரப்பு மக்களும் வடம் பிடித்து இழுக்க நேற்று மாலை 5:20 மணிக்கு தேரோட்டம் துவங்கியது.
இத்தேர் அரண்மனைவாசல், நேரு பஜார், நெல்மண்டி தெரு, மதுரை முக்கு, திருப்புத்துார் ரோடு, சத்தியமூர்த்தி தெரு வழியாக சிவன் கோயிலில் நிலையை அடைந்தது.
இன்று இரவு கோயிலில் தீர்த்தவாரி உற்சவமும், அதனை தொடர்ந்து கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும்.
தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் தலைமையில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் வேல்முருகன், ஸ்தானிகம் சந்திரசேகர் குருக்கள் விழா ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.

