/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கட்டுக்குடிப்பட்டியில் காலிக்குடங்களுடன் மறியல்
/
கட்டுக்குடிப்பட்டியில் காலிக்குடங்களுடன் மறியல்
ADDED : மே 06, 2024 12:11 AM

எஸ்.புதூர் : எஸ்.புதூர் அருகே கட்டுக்குடிப்பட்டியில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.
மணலூர் ஊராட்சிக்குட்பட்ட இக்கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் இணைப்பு கொடுத்தவர்கள் முறையாக கொடுக்காமல் குழாய்களை மேடு பள்ளமாக பதித்து விட்டனர்.
மேலும் ஒட்டுமொத்த கிராமத்திற்கும் குடிநீர் சப்ளை செய்ய போர்வெல்களில் போதிய தண்ணீர் இல்லை. பல வீடுகளில் மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சுகின்றனர். இதனால் சில பகுதிகளுக்கு குறைவான தண்ணீரே கிடைக்கிறது.
கல்வடியான் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீரே வரவில்லை. அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடமும், ஒன்றிய அதிகாரிகளிடமும் முறையிட்டு வந்தனர். நடவடிக்கை இல்லாத நிலையில் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் சிலர் காலிக் குடங்களுடன் கட்டுக்குடிப்பட்டி பஸ் நிறுத்தம் முன்பாக மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து கட்டுக்குடிபட்டி கங்காதேவி கூறியதாவது: ஒரு மாதமாக தண்ணீரே வரவில்லை. பலமுறை அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.
கட்டுக்குடிபட்டி ஊராட்சி தலைவர் புகழேந்தி கூறியதவாது: தேவையான இடங்களில் கேட் வால்வு அமைத்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் தருவதாக உறுதி அளித்துள்ளோம்.