ADDED : மார் 23, 2024 05:42 AM

திருப்புவனம்: திருப்புவனத்தில் உலா வரும் பன்றிகள் கூட்டத்தால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருப்புவனம் பேரூராட்சியில் 18 வார்டுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தினசரி ஆறு டன் குப்பை வரை தூய்மை பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. திருவிழா காலங்களில் இரு மடங்கு குப்பை வரை சேகரிக்கப்பட்டு அகற்றப்படுகிறது.
கடந்தபத்து ஆண்டுகளுக்கு முன் பன்றிகளால் மூளை காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய் பரவி வருவதால் நகர்ப்புறங்களில் பன்றிகள் வளர்க்க தடை செய்யப்பட்டு பன்றிகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டன.
இந்நிலையில் நேற்று திருப்புவனம் பகுதியில் ஏராளமான பன்றிகள் நகர்ப்பகுதியில் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன.
திருப்புவனம் இந்திரா நகர், ரயில் நிலைய வளாகம், ரயில்வே பீடர் ரோடு, காலனி உள்ளிட்ட பகுதிகளில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக உலா வருகின்றன. திடீரென பன்றிகள் கூட்டம் நகர்ப்பகுதிகளுக்கு வந்ததற்கான காரணம் தெரியவில்லை. பேரூராட்சி நிர்வாகம் பன்றிகளை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

