/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தள்ளு மாடல் வண்டி இது இறங்கி தள்ளிய பயணியர்
/
தள்ளு மாடல் வண்டி இது இறங்கி தள்ளிய பயணியர்
ADDED : மே 30, 2024 02:08 AM

திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு டவுன் பஸ்சை இறங்கி தள்ளிய பயணியர் இந்த பஸ்சை நம்பி மதுரைக்கு எப்படி செல்வது என கண்டக்டருடன் வாக்குவாதம் செய்தனர்.
மதுரை மத்திய பஸ் ஸ்டாண்டிலிருந்து திருப்புவனத்தை சுற்றியுள்ள பறையங்குளம், பிரமனுார், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட ஊர்களுக்கு அரசு டவுன் பஸ்கள் திருப்புவனம், திருப்பரங்குன்றம் கிளை பணிமனை மூலம் இயக்கப்படுகின்றன.
தினமும் ஒவ்வொரு கிராமத்திற்கும் தலா இரண்டு முதல் ஐந்து முறை வரை சென்று வரும் வகையில் இயக்கப்படும் டவுன் பஸ்கள் சமீபகாலமாக குறிப்பிட்ட நேரத்திற்கு வருவதில்லை என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் இரவு நேரங்களில் போதிய டவுன் பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் தவிப்பிற்குள்ளாகின்றனர். பல பஸ்களில் முன்புற விளக்கு மட்டுமின்றி பஸ்சிற்குள் உள்ள விளக்குகளும் எரிவதில்லை. இதனாலேயே இரவு திருப்புவனத்துடன் சில பஸ்கள் நிறுத்தப்படுகின்றன.
நேற்று முன் தினம் மாலை 6:30 மணிக்கு பறையங்குளத்தில் இருந்து மதுரை சென்ற அரசு டவுன் பஸ் திருப்புவனம் மணிமந்திர விநாயகர் கோயில் அருகே வளைவில் திரும்பும் இடத்தில் ஆப் ஆனது. பேட்டரி பழுதால் வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை.
பஸ்களில் பெண்களே அதிகளவில் இருந்ததால் இறங்கி தள்ளவும் முடியவில்லை. பஸ் கண்டக்டர் மற்றும் ஒரு சிலர் மட்டுமே இறங்கி தள்ளியும் பஸ் ஸ்டார்ட் ஆகாமல் போக்குவரத்தும் பாதிப்புக்குள்ளானது.
இதனையடுத்து மற்ற பஸ் கண்டக்டர்கள், பயணிகள் இறங்கி பஸ்சை நீண்ட தூரம் தள்ளிய பின் ஸ்டார்ட் ஆனது. இந்த பழுதான பஸ்சை நம்பி எப்படி மதுரை வரை செல்ல முடியும் என பயணிகள் கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.