ADDED : ஆக 10, 2024 05:52 AM

திருப்புவனம்: திருப்புவனம் அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்த மழைமானி மீது ஒப்பந்தகாரர் மணலை கொட்டி மூடியதால் இரண்டு நாட்களாக திருப்புவனத்தில் மழை அளவு கணக்கிடப்பட முடியவில்லை.
தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மழை மானி நிறுவப்பட்டு 24 மணி நேரத்திற்கு ஒரு முறை மழைஅளவு அறிவிக்கப்படும், மழை அளவிற்கு ஏற்ப வேளாண் மேம்பாடு, விதை நெல் விற்பனை உள்ளிட்டவை ஆய்வு செய்யப்படும்.
திருப்புவனத்தில் அரசு மருத்துவமனை வளாகத்தில் திறந்த வெளியில் மழைமானி நிறுவப்பட்டிருந்தது. தினசரி வருவாய்த்துறையினர் மழை அளவை கணக்கிட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்புவது வழக்கம், கடந்த இரு நாட்களாக திருப்புவனத்தில் பலத்த மழை பெய்தும் மழை அளவு அறிவிக்கப்படவில்லை. கடந்த 6ம் தேதி மழை அளவை கணக்கிட வருவாய்த்துறையினர் சென்ற போது மழை மானியை காணவில்லை. 7ம் தேதி சென்ற போது மழைமானி இல்லை, இதனை தொடர்ந்து தேடிய போது மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் கட்டடங்கள் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்தக்காரர் தோண்டப்பட்ட மண்ணை மழைமானி மீது கொட்டி மூடியது தெரியவந்தது.
அதிகாரிகள் இயந்திரம் மூலம் மண்ணை அகற்றிய போது மழைமானி சேதமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
சேதமடைந்த மழைமானியால் திருப்புவனத்தில் மழை அளவு கணக்கிட முடியவில்லை.