ADDED : பிப் 27, 2025 01:06 AM
பூவந்தி; பூவந்தி அருகே திருமாஞ்சோலை நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் மழை காரணமாக நெல் மூடைகள் நனைந்து சேதமடைந்தன.
திருமாஞ்சோலையில் நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கி உள்ளது. இங்கிருந்து திருப்புவனம் தாலுகாவில் உள்ள 79 ரேஷன் கடைகளுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்டவைகள் விநியோகம் செய்யப்படுகின்றன.
நுகர்பொருள் வாணிப கழக வளாகத்தில் தற்காலிக நெல் கொள் முதல் மையம் ஜனவரி 12ம் தேதி தொடங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் 32 இடங்களில் தற்காலிக நெல் கொள்முதல் மையம் செயல்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று மாலை திடீரென பெய்த மழை காரணமாக திருமாஞ்சோலை கிட்டங்கி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூடைகள் நனைந்தன. விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூடைகள், கொள் முதல் செய்யப்பட்ட நெல் மூடைகள் நனைந்து சேதமடைந்தன. கொள் முதல் செய்யப்பட்ட நெல் மூடைகளை பாதுகாக்க குறைந்த அளவே தார்ப்பாய் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூடைகளை பாதுகாக்க தார்ப்பாய் வசதி இல்லை. மாவட்ட நிர்வாகம் விவசாயிகளிடம் உடனுக்குடன் நெல்லை கொள்முதல் செய்து மூடைகளை பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.