/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அதிகரிக்கும் கோடை; வெயிலால்புளி விளைச்சல் பாதிப்பு
/
அதிகரிக்கும் கோடை; வெயிலால்புளி விளைச்சல் பாதிப்பு
அதிகரிக்கும் கோடை; வெயிலால்புளி விளைச்சல் பாதிப்பு
அதிகரிக்கும் கோடை; வெயிலால்புளி விளைச்சல் பாதிப்பு
ADDED : ஏப் 29, 2024 11:53 PM
திருப்புவனம் : தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து வறட்சி நிலவுவதால் திருப்புவனம் வட்டாரத்தில் புளியம்பழம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
திருப்புவனம், திருப்பாச்சேத்தி, பழையனுார், மாரநாடு, தஞ்சாக்கூர், கானுார் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களிலும், கண்மாய்கரைகளிலும் ஏராளமான புளியமரங்கள் உள்ளன.
இம்மரங்களில் மார்ச்சில் தொடங்கி ஏப்ரல், மே, ஜூன் உள்ளிட்ட நான்கு மாதங்களில் புளியம்பழம் சீசன் இருக்கும், அந்தந்த பகுதி விவசாயிகள் பழங்களை பறித்து விற்பனை செய்வது வழக்கம். கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாக பெய்த நிலையில் கடும் கோடை வெயில் காரணமாக கண்மாய்கள் வறண்டு காணப்படுகிறது.
இதனால் புளிய மரங்களில் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு மரத்திற்கு 10 முதல் 20 கிலோ புளி வரை கிடைக்கும், புளியம்பழம் தவிர புளியம்பழ விதைகளையும் வியாபாரிகள் வாங்கி செல்வார்கள், கண்மாய்களில் தண்ணீர் இல்லாததாலும் புளியம்பழ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஒரு மரத்திற்கு 3 முதல் 5 கிலோ வரையே கிடைத்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகள் தரப்பில் கூறுகையில்: திருப்பாச்சேத்தி கண்மாய் கரையை ஒட்டி 15க்கும் மேற்பட்ட புளியமரங்களை நெடுஞ்சாலை துறையிடம் குத்தகைக்கு எடுப்போம், வழக்கமாக ஒரு மரத்திற்கு 15கிலோ வரை கிடைக்கும். இந்தாண்டு கடுமையாக விளைச்சல் பாதித்ததுடன் புளியம்பழம் எதிர்பார்த்த அளவு பெரிதாக இல்லை, பல பழங்களில் பூச்சிகள் தாக்கி சோடையாக போய்விட்டன.
மரங்களில் இருந்து பறிக்க கூலி கொடுக்க கூட பழங்கள் கிடைக்கவில்லை. இந்த வருடம் போதிய விளைச்சல் இல்லாததால் இதுவரை ஏலம் விடவில்லை என்றனர் விவசாயிகள்.

